கடவுளின் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி புடின் நிறைவேற்றுகிறார்; உக்ரைன் விவகாரத்தில் பிரபலத்தின் பேச்சால் அதிர்ச்சி
உக்ரைன் மீதான படையெடுப்பு என்பது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கடவுள் இட்ட கட்டளை என தெரிவித்துள்ளார் அமெரிக்க மத போதகர் ஒருவர்.
அமெரிக்க ஊடக பிரபலமும் மத போதகருமான Pat Robertson என்பவரே உக்ரைன் விவகாரம் தொடர்பில் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
விளாடிமிர் புடின் மனப்பூர்வமாக உக்ரைன் மீதான தாக்குதலை முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ள Pat Robertson, அதேவேளை கண்டிப்பாக கடவுளின் கட்டளையாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது புடின் படையெடுத்திருப்பது உண்மை தான், ஆனால் விளாடிமிர் புடினின் நோக்கம் அதுவல்ல என குறிப்பிட்டுள்ள Pat Robertson, இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுப்பதே அவரது உண்மையான நோக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ரஷ்யாவின் தலைமையில் ஐரோப்பிய நாடுகள் ஒன்று திரண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக களமிறமிறங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பல்கேரியா, துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளை ரஷ்யா கட்டுக்குள் வைத்திருக்கும் நிலை உருவாகும் எனவும் Pat Robertson குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ரஷ்யாவின் மிகப்பெரிய திட்டத்திற்கு இஸ்லாமிய நாடான துருக்கியும் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முக்கிய கட்டத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஈரானும் களமிறங்கும் என குறிப்பிட்டுள்ள Pat Robertson, இந்த நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்கும் என்றார்.
ஆனால், உக்ரைன் விவகாரத்தில் துருக்கி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்பதுடன், உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை என தெரிவித்துள்ளது.
Pat Robertson விவகாரத்தில், இவர் பலமுறை இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டு வருபவர் எனவும், 1982ல் உலகம் மொத்தமாக அழிந்துவிடும் என 1976ல் தமது ஆதரவாளர்களிடம் உறுதி அளித்தவர் எனவும் கூறப்படுகிறது.
2006ல், பசிபிக் வடமேற்குப் பகுதி சுனாமியால் அழிக்கப்படும் என்று அவர் கணித்தார். மட்டுமின்றி 2007ல் அமெரிக்காவில் நடக்கும் ஒரு கூட்டப்படுகொலை உலக மக்களின் கவனத்தை அமெரிக்கா மீது திருப்பும் என்றார், இதுவரை அவர் கணித்துள்ள எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.