ரஷ்யாவில் தனிமைப்படுத்தப்படும் உக்ரேனிய அகதிகள்: நம்பிக்கை துரோகம் என குற்றச்சாட்டு
ரஷ்யாவின் மிகவும் பின் தங்கிய பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக உக்ரேனிய அகதிகளை விளாடிமிர் புடின் நிர்வாகம் அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 50 நாட்களை நெருங்கி வரும் நிலையில், திட்டமிட்டபடியே சிறப்பு இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, கீவ் சுற்றுவட்டாரங்களில் இருந்து படைகளை பின் வாங்க வைத்துள்ள ரஷ்யா, தற்போது உக்ரைன் கிழக்கு பகுதியில் பாரிய தாக்குதலுக்கு தயாரெடுத்து வருகிறது.
ஆனால், ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனங்களை துணிவுடன் எதிர்கொள்வோம் என அறிவித்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. ரஷ்ய படையெடுப்பை முன்னெடுத்த பிப்ரவரி 24 முதல் இதுவரை 4,547,735 உக்ரேனிய மக்கள் பாதுகாப்பான இடங்கள் தேடி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் ரஷ்யாவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரேனிய மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் சுமார் 100,000 உக்ரேனிய மக்களை, நாட்டின் மிகவும் பின் தங்கிய பகுதிகளுக்கு ரஷ்ய நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அவர்கள் குடியிருப்பில் இருந்து 5,500 மைல்கள் தொலைவு என வெளியான ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. இராணுவத்தின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சைபீரியாவுக்கு 11,398 பேரையும், தூர கிழக்கு பிராந்தியங்களுக்கு 7,218 பேரையும், வடக்கு காகசஸுக்கு 7,023 பேரையும் அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் தமது சொந்த பிரதேசம் என உரிமைக் கொண்டாடும் பகுதிகளிலும் உக்ரேனிய மக்களை அனுப்பி வைக்க புடின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதமும் ஐந்தாவது நாள், அகதிகள் வருகை தொடர்பில் உரிய நிர்வாகிகளுக்கு தொடர்புடைய பிரதேசகங்கள் தகவல் தெரிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் உக்ரேனிய மக்களை அனுப்பி வைத்து, இராணுவ பலத்தை அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது நம்பிக்கை துரோகம் என உக்ரைன் ஆதரவு மனிதாபிமான நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.