எதிரி நாட்டின் உதிரி பாகங்கள்.... புடின் வடகொரிய தலைவருக்கு பரிசளித்த Limousine கதை
வடகொரியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பரிசளித்த Limousine தொடர்பில் முக்கிய பின்னணி வெளியாகியுள்ளது.
Aurus limousine சொகுசு வாகனம்
கடந்த வாரம் வடகொரியாவுக்கு விஜயம் செய்திருந்த விளாடிமிர் புடின், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு முழுவதுமாக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட Aurus limousine என்ற சொகுசு வாகனத்தை பரிசாக அளித்தார்.
2018ல் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட Aurus limousine, முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பு என்றே கூறப்பட்டது. ஆனால் தற்போது சுங்கத்துறையில் இருந்து கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், பல மில்லியன் டொலர் மதிப்பிலான உதிரி பாகங்களை தென் கொரியாவில் இருந்து ரஷ்யா இறக்குமதி செய்துள்ளதாக அம்பலமாகியுள்ளது.
வடகொரியாவை பொறுத்தமட்டில் அவர்களின் முதன்மையான பகை நாடு தென் கொரியா. மேலும், புடின் பரிசளித்த அந்த வாகனத்தில் இரு தலைவர்களும் நகரில் வலம் வந்தனர்.
Aurus limousine கார்களை வடிவமைக்கும் பொருட்டு ரஷ்யா 2018 முதல் 2023 வரையில் 34 மில்லியன் டொலர் அளவுக்கு உதிரி பாகங்களை தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
தென் கொரியாவில் இருந்து இறக்குமதி
தென் கொரியா மட்டுமின்றி, சீனா, இந்தியா, துருக்கி, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தும் உதிரி பாகங்களை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் மீதான போருக்கு பின்னரும் சுமார் 15 மில்லியன் டொலர் மதிப்பிலான உதிரி பாகங்களை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது.
ஆனால் கிம்முக்கு பரிசளித்துள்ள காரில் எந்த பாகங்கள் தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல் இல்லை. இதனிடையே, 2024 பிப்ரவரி மாதம் Aurus நிறுவனத்திற்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |