G7 நாடுகளின் அழுத்தம்... போட்டிக்கு ASEAN தலைவர்களுடன் புடின் உச்சிமாநாடு
உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு ரஷ்யாவிற்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் தென்கிழக்கு ஆசியத் தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்தவிருக்கிறார்.
11 நாடுகளின் பிரதிநிதிகள்
குறித்த உச்சிமாநாடானது புதன்கிழமை முதல் மத்திய ரஷ்ய நகரமான கசானில் முன்னெடுக்கப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முழு அளவிலான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஆசிய நாடுகளுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த புடின் முயன்று வருகிறார்.

மாஸ்கோவிலிருந்து கிழக்கே சுமார் 700 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாதர்ஸ்தானின் தலைநகரில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது; அதேவேளையில், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலான போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரான்சில் G7 நாடுகளின் கூட்டமும் நடைபெற்று வருகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 நாடுகளின் பிரதிநிதிகள் புதன்கிழமையன்று கசான் நகருக்கு வருகை தரவுள்ளனர்; உச்சிமாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் மறுநாள் நடைபெறவுள்ளன.
ரஷ்யா மற்றும் ASEAN நாடுகளுக்கு இடையிலான 35 ஆண்டுகால ஒத்துழைப்பை இது நினைவுகூருகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது.
தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தங்கள் பிரதமர்களை அனுப்புகின்றன; அதேவேளையில், பிலிப்பைன்ஸ் சார்பில் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா-ASEAN உறவு
மியான்மரும் ஒரு தூதுக்குழுவை அனுப்பும் என்று தெரிய வந்துள்ளது. உலகளாவிய மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றில் ரஷ்யா-ASEAN உறவுகளின் புதிய இலக்குகள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, தனது பொருளாதாரத்தை, குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதியை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை நோக்கி மாற்றியமைத்துள்ளது.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிசக்தி நெருக்கடியால் ஆசிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டில், உக்ரைன் தலைவர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தபோது, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அத்துடன், ரஷ்ய எண்ணெய்க்கு எதிராக அமெரிக்காவால் விரைவில் மீண்டும் தடைகளை விதிக்க முடியும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே கடலில் இருந்த ரஷ்ய எண்ணெய் சரக்குகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விலக்கை விதித்து, பின்னர் அதை நீட்டித்ததால், ஐரோப்பிய நட்பு நாடுகள் கலக்கமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |