விளாடிமிர் புடினுக்கு எதிராக திடீர் போர்க்கொடி: நீதிமன்றத்தை நாடும் இராணுவ வீரர்கள்
உக்ரைனில் களமிறங்க மறுப்பு தெரிவித்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் குழு ஒன்று தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ரஷ்யாவில் அரிதிலும் அரிதாக தேசிய பாதுகாப்பு படையினரில் 25 வீரர்கள் தங்கள் தளபதியின் உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையானது ரஷ்யாவில் நாளை முன்னெடுக்கப்பட உள்ளது என சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலருமான Pavel Chikov தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் களமிறங்க மறுப்பு தெரிவித்ததாக கூறி அவர்களை பணி நீக்கம் செய்துள்ளது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அவர்கள் நீதிமன்றத்தை கோர உள்ளனர்.
இதனிடையே, ரஷ்யாவின் 17 நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தேசிய பாதுகாப்பு படை வீரர்களும் தற்போது சட்ட ஆலோசனைகளை கோரியுள்ளனர்.
உக்ரைனில் களமிறங்க மறுப்பு தெரிவித்த வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. 20ல் இருந்து சுமார் 40% வீரர்கள் உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் படையெடுப்புக்கு மறுத்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.
மேலும், பல ரஷ்ய வீரர்கள் தங்கள் அண்டை நாட்டவர்களை கொல்ல வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளதுடன், புகாரும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கீழ் செயல்படும் ரஷ்யாவின் தேசிய படையானது, உக்ரைன் மீதான படையெடுப்பின் துவக்க நாட்களில் களமிறக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மக்கள் போருக்கு பயந்து ரஷ்ய துருப்புகளிடம் கொத்தாக சரணடைவார்கள் எனவும், அதனால் உக்ரைன் நகரங்களை ரஷ்ய தேசிய படையானது தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என ரஷ்யா நம்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் திட்டங்கள் அனைத்தும் தலைகீழானதுடன், தேசிய படை வீரர்கள் பலர் உக்ரைனில் கொல்லப்பட்டனர்.
தற்போது விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான தேசிய படை வீரர்களே, இராணுவத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளது, புதிய நெருக்கடியை உள்ளூரில் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.