ஈரானுடன் 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்துகொண்ட ரஷ்யா... முழுமையான பின்னணி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும் 20 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
பயன்படுத்த அனுமதிக்காது
இந்த ஒப்பந்தமானது மேற்கத்திய நாடுகளை கவலை கொள்ள செய்யும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்த 20 ஆண்டுகால ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவும் ஈரானும் தங்கள் பாதுகாப்பு சேவைகள், இராணுவப் பயிற்சிகள், போர்க்கப்பல் துறைமுக வருகைகள் மற்றும் கூட்டு அதிகாரிகள் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
மட்டுமின்றி, இரு நாடுகளும் தங்கள் பிரதேசத்தை மற்றொன்றை அச்சுறுத்தும் எந்தவொரு செயலுக்கும் பயன்படுத்த அனுமதிக்காது, மேலும் இரு நாடுகளையும் தாக்கும் ஒரு நாட்டுக்கு எந்த உதவியும் செய்யாது.
அத்துடன் இராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள வகையான பரஸ்பர பாதுகாப்பு விதி இதில் சேர்க்கப்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு தனது முதல் ரஷ்ய பயணத்தில் பெஷேஷ்கியன், இந்த ஒப்பந்தத்தை இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயமாகப் பாராட்டியுள்ளார். அதேவேளை, சர்வதேச விவகாரங்களில் ரஷ்யாவும் ஈரானும் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், குறைவான அதிகாரத்துவமும், உறுதியான நடவடிக்கையும் நமக்கு தேவை. மற்றவர்களால் என்ன சிரமங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றைக் கடந்து முன்னேற முடியும் என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா
மேலும், உக்ரைன் போரில் என்ன நடக்கிறது என்பது குறித்து ரஷ்யா தொடர்ந்து ஈரானுக்குத் தகவல் அளித்து வருவதாகவும், மத்திய கிழக்கு மற்றும் தெற்கு காகசஸ் பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர்கள் நெருக்கமாக ஆலோசனை நடத்தியதாகவும் புடின் கூறினார்.
அத்துடன், ரஷ்ய எரிவாயுவை அஜர்பைஜான் வழியாக ஈரானுக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியமான எரிவாயு குழாய் பாதை அமைக்கும் பணிகள் சிரமங்கள் இருந்தபோதிலும் முன்னேறி வருவதாக புடின் கூறினார்.
ஈரானுக்கான புதிய அணு உலைகளை உருவாக்குவதில் தாமதங்கள் இருந்தபோதிலும், ரஷ்யா மேலும் அணுசக்தி திட்டங்களை மேற்கொள்ள உறுதியாக உள்ளது என்றார்.
உக்ரைனில் போரின் போது ஈரானிய ட்ரோன்களை ரஷ்யா அதிக அளவில் பயன்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிற்கு close-range ஏவுகணைகளை வழங்கியதாக ஈரான் மீது அமெரிக்கா செப்டம்பர் மாதம் குற்றம் சாட்டியது.
ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. ஈரானிய ஏவுகணைகளைப் பெற்றதை உறுதிப்படுத்த ரஷ்யா மறுத்துவிட்டது, ஆனால் ஈரானுடனான அதன் ஒத்துழைப்பை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |