தங்க டாய்லெட் முதல் சொகுசுக் கப்பல்கள் வரை... உலகின் நம்பர் ஒன் பணக்காரர் புடின்தான்: ஆதாரத்துடன் அடுக்கும் விமர்சகர்கள்
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் யார் என்றால், இன்றைய திகதிக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்தான் என்கின்றன பிரபல ஊடகங்கள்.
எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 222.4 பில்லியன் டொலர்கள் என்கிறது Forbes பத்திரிகை.
ஆனால், எலான் மஸ்கையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வேறொருவர் இருக்கிறார், அவரது உண்மையான சொத்து மதிப்பு 285 பில்லியன் டொலர்கள் என பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அந்த நபர்... ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின்!
ஆம், வெளிப்படையாக உலகின் நம்பர் ஒன் என எலான் மஸ்க் அழைக்கப்படும் நிலையில், இரகசியமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் ரஷ்ய அதிபர் புடின்தான் என்கின்றன ஊடகங்கள்.
ரஷ்ய அதிபர் புடினின் சொத்து மதிப்பு 285 பில்லியன் டொலர்களாம். ஒரு மன்னரைப் போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் புடின், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பை விட 60 மடங்கு அதிக பணக்காரராம். ஆனால், புடின் அதை ஒப்புக்கொள்வதில்லையாம்.
உக்ரைன் மீது புடின் போர் தொடுத்துள்ள நிலையில், அவரது விமர்சகர்கள் இது குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ரஷ்ய அதிபர் புடின் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளர் என்று விமர்சித்துள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த Nancy Pelosi, அவர்தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
புடினின் விமர்சகர்களும், அவர்தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்கிறார்கள். அவரிடம் 100 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய சொகுசுக் கப்பல் உட்பட நான்கு படகுகள், 43 விமானங்கள், 700 கார்கள், 15 ஹெலிகொப்டர்கள், ஒரு ஆடம்பர ஜெட் மற்றும் முழுவதும் தங்கத்தாலான ஒரு டாய்லெட்டும் உள்ளது என்கிறார்கள் அவர்கள்.
புடினுக்கு 20 ஆடம்பர பங்களாக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றின் மதிப்பு மட்டுமே 1.4 பில்லியன் டொலர்கள்.
விமானத்தில் பறக்க விரும்பினால், 716 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொகுசு விமானத்தைத்தான் பயன்படுத்துகிறார் புடின். அந்த விமானத்தில் இருக்கும் கழிப்பறை ஒன்று முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டது!
இதுபோக, 127 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான தங்கம், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் என எக்கசக்கமான சொத்துக்கள் புடினிடம் உள்ளன. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், புடினுடைய விமர்சகர்கள் கூறுவதைப் பார்த்தால் தனது நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெயரை தட்டிப்பறித்துப் போய்விட்டாரே புடின் என எலன் மஸ்க் வருந்தக்கூடும்!