ஈராக் போரில் புடின் தோல்வி அடைவார்! 24 மணிநேரத்தில் இருமுறை வார்த்தை தடுமாறிய அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் தனது வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்பட்டது. ஒரு முறையல்ல, ஒரே நாளில் இரண்டு முறை அவர் தவறுதலாக பேசியுள்ளார்.
ஈராக்கில் நடைபெறும் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தோல்வி அடைவார் என்று ஜோ பைடன் புதன்கிழமை தெரிவித்தார். இதில் அவர் உக்ரைன் என்று சொல்லியிருக்க வேண்டும், மாறாக ஈராக் என்று கூறிவிட்டார்.
சிகாகோ பயணத்தில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பைடனிடம், உக்ரேனில் சண்டையிடும் ஒரு ரஷ்ய கூலிப்படைத் தலைவரின் தலைமையிலான கிளர்ச்சியால் புடின் பலவீனமடைந்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த பைடன், "சொல்வது மிகவும் கடினம். ஆனால் ஈராக்கில் நடந்த போரில் அவர் தோற்றுப் போகிறார் என்பது தெளிவாகிறது. அவர் உள்நாட்டுப் போரில் தோற்று, உலகம் முழுவதும் கேலிக்குரியவராக மாறினார்" என்று கூறினார். 24 மணி நேரத்தில் இது இரண்டாவது வார்த்தை சரிவாகும்.
செவ்வாய்கிழமை இரவு பேசும்போது, இந்தியாவைக் குறிப்பிடுவதற்கு பதிலாக சீனாவைக் குறிப்பிட்டுள்ளார் அதிபர் ஜோ பைடன்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரத்திற்கு முன்பு வெள்ளை மாளிகைக்கு வந்ததை நினைவு கூர்ந்த ஜோ பைடன், அவர் பேசியதாவது, "என்னுடைய புதிய சிறந்த நண்பரை நீங்கள் பார்த்திருக்கலாம் - இப்போது உலகின் மிகப் பெரிய நாடான சீனாவின் பிரதம மந்திரி - அதாவது, என்னை மன்னியுங்கள், இந்தியா..," என தடுமாறி பேசினார்.
இவ்வாறு தவறுதலான வார்த்தைகளை பேசுவது, தடுமாறுவது என்பது 80 வயதான அமெரிக்க ஜனாதிபதிக்கு புதிதல்ல. இருப்பினும் அவர் இவ்வாறு பேசியது பேசுபொருளாகவே உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |