வெற்றி விழாவிற்குத் தயாராகும் ரஷ்யா... உக்ரைன் போர் தொடர்பில் புடின் ஆதரவாளர்களுக்குப் பறந்த தகவல்
Putin’s loyalist MPs told to prepare for end of war: புடினின் விசுவாச நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரின் முடிவுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விளாடிமிர் புடினின் போர்க்குணமிக்க, போரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், போர் முடிவுக்கு வருவதற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிரடி நகர்வு
போர்முனையில் ரஷ்யா தொடர்ந்து பெருமளவிலான வீரர்களை இழந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, நேட்டோ உறுப்புரிமைக்கு ஈடாக உக்ரைன் முழு டான்பாஸ் பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்கும் யோசனையை அமெரிக்கா முன்வைத்த நிலையில் ரஷ்யாவில் இந்த அதிரடி நகர்வுகள் முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால், அமெரிக்காவின் இந்த முன்னெடுப்பைப் பயன்படுத்தி ரஷ்யா ஐரோப்பிய கண்டத்தின் எல்லைகளை மாற்றியமைக்கவும், அதன் மூலம் நேட்டோவை (Nato) பலவீனப்படுத்தவும் கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
இதனிடையே, கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இரு தரப்பிலிருந்தும் பெருமளவிலான கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட சில உறுதியான உடன்படிக்கைகள் எட்டப்பட்டன.
ஆனால், பிராந்திய சிக்கல்கள் மற்றும் உக்ரைனுக்கான மேற்கத்திய பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாக சில பெரும் தடைகள் நீடிக்கின்றன.

இருப்பினும், ஒரு மர்மமான திருப்பமாக, போர் முனையிலிருந்து அனைத்து ரஷ்யப் படைகளும் திடீரெனத் திரும்பும் நிலை உருவாகலாம் எனவும் அதற்குத் தயாராக இருக்குமாறும் புடின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரகசியமாக முன்னெடுக்கப்பட்ட அமர்வு ஒன்றில் பேசிய முன்னாள் பிரதமர் செர்ஜி கிரியென்கோ, போர்க்களத்திலிருந்து திரும்பும் வீரர்களுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருக்குமாறு கூறியுள்ளார்.
புடின் தயாராகிறாரா
அதாவது, உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் பங்கேற்று வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பி வரும்போது, அதை வெற்றி விழாவாகக் கொண்டாட அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று செர்ஜி கிரியென்கோ கூறியுள்ளார்.

இந்த நிலையில், உக்ரைன் தரப்பிலிருந்து ரஷ்யாவின் மின் கட்டமைப்பின் மீது நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான மற்றும் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் தயாராகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா 1.6 மில்லியன் இறப்புகளையும் காயமடைந்தவர்களையும் எதிர்கொண்டு பேரழிவைச் சந்தித்திருந்தாலும், தான் வெற்றி பெற்றுவிட்டதாகத் தனது நாட்டு மக்களை நம்ப வைப்பதற்காக, விளாடிமிர் புடின் ஒரு ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
இதன் பின்னணியில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் உடனான புடினின் சந்திப்பும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.