உக்ரைனுக்கு 500 பில்லியன் டொலர் இழப்பீடு... புடின் தொடர்பில் எச்சரிக்கும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்
ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது போரினால் உக்ரைனுக்கு ஏற்படுத்திய சேதத்திற்கு இழப்பீடாக 500 பில்லியன் டொலர் தொகையை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் முன்வைத்துள்ளார்.
இழப்பீடு வழங்க வேண்டும்
உக்ரைன் மீது போர் தொடுத்தவர் விளாடிமிர் புடின், அதனால் ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருவது முறையே. ரஷ்யா திட்டமிட்டு அழித்த உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப பணம் செலவிட வேண்டியவர்கள் உக்ரேனியர்களோ அல்லது மேற்கத்திய நாடுகளின் வரி செலுத்துவோரோ அல்ல, ரஷ்யாவாகத்தான் இருக்க வேண்டும்.
முழுமையாக இல்லை என்றாலும், புடின் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது செலுத்துவதை உறுதி செய்ய ஒரு வழி உள்ளது என ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மேற்கத்திய நிதி அமைப்புகளில் சுமார் 300 பில்லியன் டொலர் மதிப்புள்ள முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பாவில் உள்ளன. அந்த தொகையை பறிமுதல் செய்து உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ரிஷி சுனக் முன்வைத்துள்ளார்.
மேலும், சிக்கல்களை தவிர்க்க, இந்த சொத்துக்கள் அனைத்தும் ஒரு இழப்பீடு அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டு, அவர்கள் உக்ரைனுக்கு வழங்க வேண்டும். இது உடனடியாக நடக்கவில்லை என்றால், உக்ரைனுக்குத் தேவையான ஆதரவு ஒருபோதும் கிடைக்காமல் போகலாம்.
எதிர்வரும் வாரங்களில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், ஆனால் நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தை சாத்தியமில்லாமல் போக வாய்ப்புள்ளது என்றார்.
புடினின் கை ஓங்கும்
இந்த சூழ்நிலைகளில், ரஷ்ய சொத்துக்களை முடக்கி வைக்கும் அரசியல் நோக்கம் என்றென்றும் நிலைக்காது, அதாவது அவை ரஷ்யாவிற்குத் திருப்பித் தரப்படும் நிலை உருவாகும்.
மேலும், மேற்கத்திய ஆதரவைத் திரும்பப் பெறுவதன் மூலம் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு வர நிர்பந்திக்கப்பட்டால், விளாடிமிர் புடினின் கை ஓங்கும், சந்தேகத்திற்கு இடமின்றி முடக்கப்பட்ட சொத்துக்களை அவர் திரும்பக் கோருவார்.
மட்டுமின்றி, உக்ரைனை மேலும் அச்சுறுத்தும் ஆயுதங்களுக்காக அவர் அந்த தொகையை செலவிடக் கூடும். பிரித்தானியாவும் நமது ஐரோப்பிய நட்பு நாடுகளும் விரைவாகச் செயல்படாவிட்டால் இது யதார்த்தமாக மாறும் அபாயம் உள்ளது என்றே ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |