புடினின் அடுத்த இலக்கு... ஐரோப்பாவே நடுங்கப் போகிறது: முன்னாள் நேட்டோ தலைவர் எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பாவிட்டால் பிரித்தானியா எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் நம்பும் ஒரு திகிலூட்டும் சாத்தியமான யதார்த்தத்தை முன்னாள் நேட்டோ தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நேட்டோவிற்கு மரண அடி
நேட்டோவின் முன்னாள் தலைவரான சர் ரிச்சர்ட் ஷிரெஃப் தெரிவிக்கையில், உக்ரைன் போர் தொடர்பிலும் அதன் நேச நாடுகள் குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி வரும் கருத்துகள் நேட்டோவிற்கு மரண அடியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைன் மீது தேவையற்ற அழுத்தங்களையும் ட்ரம்ப் நிர்வாகம் அளித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேட்டோவின் வருடாந்திர பட்ஜெட்டில் சுமார் 22 சதவீதத்தை அமெரிக்கா முன்பு செலுத்தி வந்தது, இது சுமார் 3.2 பில்லியன் பவுண்டுகளாகும்.
ஆனால் தற்போது அமெரிக்கா வெறும் 16 சதவீதத்திற்கும் குறைவாகவே செலுத்துகிறது. இருப்பினும் உலகின் பிற நாடுகளை விட அமெரிக்கா அதன் பாதுகாப்பிற்காக அதிகமாக செலவிடுகிறது, இதனாலையே அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படைகளில் ஒன்றாக உச்சத்தில் உள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா தற்போது முன்னெடுக்கும் நகர்வுகள் கண்டிப்பாக ரஷ்யாவை வலுப்படுத்தும் என்பதுடன், எதிர்காலத்தில் உக்ரைனை மொத்தமாக இணைத்துக்கொள்ளும் நிலையும் உருவாகும் என சர் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ரஷ்யா பற்றிய புடின் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் பல சந்தேகத்திற்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக அவர் பதிவு செய்துள்ளார்.
ஆயுதம் வழங்க வேண்டும்
உக்ரைனைக் கைப்பற்றிய பிறகு, புடின் ஜார்ஜியா, மால்டோவா மற்றும் ருமேனியாவின் பொறுப்பில் ரஷ்ய ஆதரவு கைப்பாவைகளை வைப்பார் என்றும் சர் ரிச்சர்ட் எச்சரித்துள்ளார்.
விளாடிமிர் புடினின் அந்த முடிவு பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நேரடிப் போருக்கு வழிவகுக்கும். அதில் ஏற்கனவே ரஷ்ய இராணுவம் வெற்றி கண்டுள்ள திட்டத்தை செயல்படுத்துவார்கள் என்றும், சிறார்கள், பெண்களை வன்கொடுமைக்கு இரையாக்கி, பொதுமக்களை கூட்டக் கொலைக்கு உட்படுத்துவார்கள் என்றும் சர் ரிச்சர்ட் எச்சரித்துள்ளார்.
உக்ரைனின் மரியுபோல் நகரில் இதை ரஷ்ய இராணுவம் செயல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள சிறார்களை ரஷ்யாவுக்கு நாடுகடத்தியதையும், நூற்றுக்கணக்கான போர் குற்றங்களை அந்த நகரில் நிகழ்த்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவங்களை இனப்படுகொலை என்றே உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். ஐரோப்பா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதம் வழங்க வேண்டும் என்றும், நேட்டோ உறுப்பு நாடுகள் கட்டாயமாக வீரர்களை சேர்ப்பதை துவங்க வேண்டும் என்றும் சர் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பா பிளவுபட்டால், ஐரோப்பா தனது இலக்கை நோக்கி முன்னேறவில்லை என்றால், நமது எதிர்காலம் குறித்து நான் மிகவும் அஞ்சுகிறேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |