உக்ரைனா... வேண்டாம்: போருக்கு பயப்படும் விளாடிமிர் புடினின் கூலிப்படை
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் கூலிப்படை உக்ரைன் செல்ல அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவே கூறப்படுகிறது. ரஷ்ய தரப்பில் 10,000 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கையில், 16,000 கடந்துள்ளதாக உக்ரைன் தரப்பு விரிவான தரவுகளை வெளியிட்டு, போரில் ஈடுபட்டுவரும் ரஷ்ய துருப்புகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், விளாடிமிர் புடினின் தனிப்பட்ட படையான தேசிய காவலர் படையை உக்ரைனுக்கு அனுப்ப அவர் திட்டமிட்டு வருவதாகவும், ஆணையும் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், சுமார் 12 வீரர்கள் உக்ரைனில் போருக்கு பயந்து, புடினின் உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், அவர்களின் இராணுவ ஒப்பந்தங்கள் ரஷ்ய எல்லைக்குள் மட்டுமே பொருந்தும் எனவும் பயத்தில் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், நாடுகளுக்கு இடையே போரிட அனுப்புவதால் சட்ட சிக்கல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, அவர்களில் எவருக்கும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இல்லை எனவும், ரஷ்யாவை விட்டு வெளியேறும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 6 முதல் கிரிமியாவிற்கு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் மற்றும் உக்ரைனுக்கு செல்ல உத்தரவிடப்பட்டபோது அவர்கள் வருடாந்திர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர் எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பிப்ரவரி 25ம் திகதி முதல் அவர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், அந்த 12 வீரர்களும் தங்களது நிர்வாகத்திடம் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், உக்ரைன் எல்லைக்கு பயிற்சிக்காக அனுப்பப்படுவதாக கூறியே, பெரும்பாலான வீரர்கள் ஏமாற்றப்பட்டு, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் படையெடுப்புக்காக சுமார் 150,000 முதல் 200,000 துருப்புகளை ரஷ்யா அனுப்பி வைத்திருந்தாலும், உரிய திட்டமிடல் ஏதுமில்லாமல் உக்ரைனில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர் இளம் வீரர்கள்.
உணவு, வாகனங்களுக்கான எரிபொருள், குடிநீர் உள்ளிட்ட எதையும் ரஷ்ய தரப்பு தங்கள் வீரர்களுக்கு போதிய இடைவெளியில் அனுப்பவில்லை என்றே கூறப்படுகிறது. நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், போர் தொடங்கிய இந்த 30 நாட்களில் உக்ரேனில் 30,000 முதல் 40,000 போர்க்கள இழப்புகளை ரஷ்யா சந்தித்துள்ளது, இதில் 7,000 முதல் 15,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.