விளாடிமிர் புடினின் மக்கள் ஆதரவு கடும் சரிவு: வெளிவரும் பின்னணி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மக்கள் ஆதரவு, தொடர்ந்து ஏழாவது வாரமாக 65.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
மிக நீண்ட காலம் ஆட்சி
சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததன் பிறகு வெறும் எட்டு ஆண்டுகளில் போரிஸ் யெல்ட்சினால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரஷ்யாவின் உச்சத் தலைவரான புடின், 1999-ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ நாட்டை ஆண்டு வருகிறார்.

கிழக்கு ஜேர்மனியில் பணியாற்றியபோது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைக் கண்ட ஒரு முன்னாள் KGB லெப்டினன்ட் கர்னலான விளாடிமிர் புடின், தனது தற்போதைய ஆறு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தால், ஜோசப் ஸ்டாலினைப் பின்னுக்குத் தள்ளி, பேரரசி இரண்டாம் கேத்தரின் காலத்திற்குப் பிறகு ரஷ்யாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஆட்சியாளராகத் திகழ்வார்.
ஆனால் சமீபத்திய வாரங்களில் அவரது மக்கள் செல்வாக்கு கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. மார்ச் மாதம் 73.3 சதவீதாமாக இருந்த நிலையில், தற்போது 65.6 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆனால் ஏன் இந்த சரிவு என விளக்கமேதும் குறிப்பிடப்படவில்லை. ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான வழிகளைக் கண்டறியுமாறு அவர் கடந்த வாரம் தனது உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
எதிர்ப்பு நிலை
இதனிடையே, அலைபேசி இணைய சேவை தொடர்பான கட்டுப்பாடுகள் கடந்த சில மாதங்களாக மக்களை அதிருப்திக்கு தள்ளியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இந்தக் கட்டுப்பாடு என புடின் விளக்கம் அளித்திருந்தாலும், மக்களிடையே எதிர்ப்பு நிலை நீடிக்கிறது.
மட்டுமின்றி, போர் மற்றும் அரசின் தணிக்கைக்கு மத்தியில், ரஷ்யர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் எனும் கேள்வி, கணிசமான விவாதத்திற்குரிய ஒரு பொருளாகத் திகழ்கிறது.

மேலும், புடினுக்கு மிக அதிக அளவில் மக்கள் ஆதரவு இருப்பதாக அரசாங்கம் கூறுவது உண்மையில் நம்பத்தகுந்ததாக இல்லை என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு அவரது மக்கள் செல்வாக்கு அல்லது ஆதரவு 64.3%-இலிருந்து 80%-க்குச் சற்றுக் குறைவாக உயர்ந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் அது 75 சதவீதத்திற்கும் மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |