தரையிறங்க முடியாமல் தவித்த புடின் விமானம்: பின்னணியில் உக்ரைன்
Vladimir Putin trapped in sky due to Ukraine drone attacks: உக்ரைனின் சரமாரி ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, புடின் பயணித்த விமானம் தரையிறங்கமுடியாத நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திடீரென ஒரு நாள் உக்ரைனை ஊடுருவியது ரஷ்யப் படைகள். திகைத்தாலும், திருப்பி அடிக்கத் துவங்கியது உக்ரைன்.
இரு நாட்டுப் படைவீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதைத் தாண்டி, ட்ரோன்கள், ரோபோக்கள் போன்ற விடயங்களைப் போரில் பயன்படுத்தத் துவங்க, ரஷ்ய உக்ரைன் போர் துவங்கி நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இன்னமும் போர் நீடிக்கிறது.
அத்துடன், உக்ரைன் இப்போது அந்த ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவுக்கு உள்ளேயே தாக்குதல்கள் நடத்திவருகிறது.
தரையிறங்க முடியாமல் தவித்த புடின் விமானம்
இந்நிலையில், உக்ரைனின் சமீபத்திய தாக்குதல்கள் புடினுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆம், உக்ரைன் தனது ட்ரோன்களால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதால், புடின் பயணித்த விமானமும், அவருடன் பயணித்த அதிகாரிகளின் விமானங்களும் ரஷ்யாவில் திட்டமிட்டபடி தரையிறங்கமுடியாத நிலை ஏற்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
டர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற உச்சி மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு புடின் தனது விமானத்தில் திரும்பிக்கொண்டிருக்க, அவருடன் அவரது அதிகாரிகளின் மூன்று விமானங்களும் பயணித்துள்ளன.
அப்போது உக்ரைனின் சரமாரியான தாக்குதல்களைத் தொடர்ந்து, மாஸ்கோவிலுள்ள Vnukovo, Sheremetyevo, Domodedovo மற்றும் Zhukovsky ஆகிய நான்கு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
ஆகவே, புடின் மற்றும் அவரது அதிகாரிகள் பயணித்த விமானங்கள் மாஸ்கோவில் தரையிறங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வானில் வட்டமிட்ட அந்த விமானங்கள், பின்னர் செயின்ற் பீற்றர்ஸ்பர்க் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.