ஈரான், உக்ரைன் போர்: டிரம்ப் - புடின் இடையே 90 நிமிட தொலைபேசி உரையாடல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே 90 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் - புடின் உரையாடல்
ஈரான் மற்றும் உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இருவரும் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த உரையாடல் 90 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும், இருதரப்புக்கும் இது வெளிப்படையாகவும், தொழில் முறையாகவும் அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரான் மற்றும் வளைகுடாவில் தற்போது நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலை குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேசியதாக உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் முடிவை வரவேற்ற புடின்
இந்த பேச்சுவார்த்தையின் போது, ஈரான் மீதான போர் நிறுத்த நடவடிக்கையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்த முடிவு சரியானது என புடின் கருதுவதாகவும், இது பேச்சுவார்த்தை மற்றும் பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற நிலைமையை சரி செய்ய உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஈரான் மீதான போர் நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தொடங்கினால், அது ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதை புடின் சுட்டிக்காட்டியதாக உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய கிழக்கில் போர் தொடர்பான ராஜதந்திர முயற்சிகளுக்கு ரஷ்யா அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |