சிரியாவுக்கு ஏற்பட்ட நிலை... உக்ரைனில் இரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தலாம்!
சிரியாவில் ரஷ்யா முன்னெடுத்த அதே போர் நடவடிக்கைகளை உக்ரைனிலும் எதிர்வரும் நாட்களில் விளாடிமிர் புடின் செயல்படுத்தலாம் என்ற அச்சம் நிபுணர்கள் தரப்பில் எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு 9வது நாளை எட்டியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக விளாடிமிர் புடின் இரசாயன ஆயுதங்களை உக்ரைனில் பயன்படுத்தும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதுவரையான ரஷ்ய துருப்புகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால், 2000ல் செச்சனியாவிலும் 2013ல் சிரியாவிலும் முன்னெடுத்த அதே போர் தந்திரங்களை உக்ரைனிலும் ரஷ்யா முயற்சிப்பதாக தெரியவரும் என்கிறார்கள் நிபுணர்கள்.
2013 காலகட்டத்தில் சிரியாவில் ஜனாதிபதி அசாத் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதின் பின்னணியில் ரஷ்யா இருந்தது. தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை சொந்த மக்கள் மீதே பயன்படுத்த அசாத் அரசை புடின் தூண்டினார்.
போரில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகள் கடைபிடித்து வந்ததை அசாத் மற்றும் புடின் 2013ல் மீறினார்கள். இதற்கு பதிலடியாக ஒபாமா அரசு போர் நடவடிக்கைகளை சிரியா மீது முன்னெடுக்க முயன்றது.
ஆனால் பிரித்தானியா அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததை அடுத்து, ஒபாமா நடவடிக்கைகளை கைவிட்டார். தற்போது சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்து தகவல்கள் கசிந்து வருகிறது.
உக்ரைன் அணுமின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் முன்னெடுத்தது விளாடிமிர் புடினின் திட்டம் என்றால், ஐரோப்பிய நாடுகள் கண்டிப்பாக புடினின் மிரட்டலை எதிர்கொள்ள நேரிடும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய துருப்புகள் எப்போதும் ஒரு நகரை நேரடியாக தாக்குவதில்லை எனவும், முதலில் சுற்றுவட்டாரப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நிலையில், ரஷ்ய துருப்புகள் மற்றும் இராணுவ வாகனங்கள் நகருக்குள் நுழையும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இதே திட்டத்தையே சிரியாவின் முக்கிய நகரங்களான அலெப்போ மற்றும் இட்லிப்பில் ரஷ்யா முன்னெடுத்தது. தற்போது உக்ரைனிலும் அதுபோன்ற நகரங்களை அழிக்கும் நாசகார வேலையை ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டுமின்றி, துணிந்து போராடும் உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்கும் நடவடிக்கைகளும் இனி வரும் நாட்களில் ரஷ்யா முன்னெடுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.