உக்ரைன் மீதான இலக்குகள் விரிவுபடுத்தப்படும்: ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவிப்பு!
மேற்கத்திய நாடுகள் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஆயுதங்களை வழங்கினால், உக்ரைனில் தாக்குதல் நடத்தப்படும் இலக்குகளின் பட்டியலை ரஷ்யா மேலும் விரிவுபடுத்தும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் போர் தாக்குதல் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் மையப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் எத்தகைய தாக்குதலும் இடம்பெறாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதி நிலவியது, ஆனால் தற்போது ரஷ்யா மீண்டும் தலைநகர் கீவ்வை ஞாயிற்றுக்கிழமை தாக்கியது.
இதுத் தொடர்பாக ரஷ்ய வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் தலைநகருக்கு அருகில் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட டாங்கிகளை ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்துவிட்டதாக தெரிவித்தது, இருப்பினும் இதனை மறுத்த உக்ரைன், ரஷ்யா ரயில்களை பழுதுபார்க்கும் ஆலையில் அழித்துள்ளது என தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜனாதிபதி புடின், "பொதுவாக, கூடுதல் ஆயுத விநியோகம் பற்றிய இந்த வம்பு, என் கருத்துப்படி, ஆயுத மோதலை முடிந்தவரை நீட்டிப்பதற்கான ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் நீண்ட தூரம் ஏவுகணைகளை அனுப்பினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய படையின் முன்னேற்றங்களுக்காக...உக்ரைன் மக்கள் சரணடைய மாட்டார்கள்: ஜெலன்ஸ்கி உறுதி!
இந்த எச்சரிக்கையையும் தாண்டி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டால், உக்ரைனில் தாக்குதல் நடத்தப்படும் இலக்குகளின் பட்டியலை ரஷ்யா மேலும் விரிவுபடுத்தும், இதுவரை தாக்காத இலக்குகளை தாக்குவோம் என கடுமையான எச்சரிக்கையை புடின் மேற்கத்திய நாடுகளுக்கு விடுத்துள்ளார்.