மொத்த உக்ரைனும் புடினின் இலக்கு... எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை
உக்ரைன் முழுவதையும் கைப்பற்றவும், ஐரோப்பாவின் சில பகுதிகளை மீண்டும் பெறவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
ரகசிய திட்டம்
உக்ரைன் தவிர்த்து, முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குச் சொந்தமான ஐரோப்பாவின் சில பகுதிகளையே புடின் குறிவைத்துள்ளார்.

அமெரிக்க உளவுத்துறையின் இந்த அறிக்கைகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையாளர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை பதிவு செய்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்கா சார்பில் அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பவர்களும், போரை முடிவுக்கு கொண்டுவர புடின் கடும் முயற்சிகள் முன்னெடுப்பதாகவே விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
விளாடிமிர் புடினின் இந்த ரகசிய திட்டம் தொடர்பில், மிக சமீபத்தில் வெளியான உளவுத்துறை அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, தாம் ஐரோப்பாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருப்பதில்லை என தொடர்ச்சியாக புடின் கூறிவரும் கருத்தையும் அமெரிக்க உளவுத்துறை நிராகரித்துள்ளது.
2022-ல் புடின் தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து அமெரிக்க உளவு அமைப்புகளின் இந்த அறிக்கைகள் உண்மைகளை அம்பலப்படுத்தி வருகின்றன.
உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் கூட்டமைப்பு நாடுகளின் பிரதேசங்கள், நேட்டோ உறுப்பினர்கள் உட்பட, புடின் விரும்பும் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உளவு நிறுவனங்களின் கருத்துக்களுடன் அமெரிக்க உளவுத்துறையின் தேடல்கள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன.

புடின் இன்னும் அதிகமாக வேண்டும் என விரும்புகிறார் என்பதுதான் எப்போதும் உளவுத்துறையின் கருத்தாக உள்ளது. இதனாலையே, போலந்தும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும், பால்டிக் நாடுகளும், ரஷ்யாவின் முதல் இலக்கு நாங்களே என நம்புகின்றனர்.
லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கின் பெரும்பகுதி உட்பட, உக்ரைன் பிரதேசத்தில் சுமார் 20 சதவீதத்தை ரஷ்யா தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அமெரிக்க ஆதரவு
கிரிமியாவையும் 2022 முதல் கைப்பற்றிய அந்த நான்கு மாகாணங்களையும் ரஷ்யாவிற்குச் சொந்தமானவை என்றே புடின் கூறி வருகிறார். அதேவேளை, முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தாங்கள் கட்டுப்படுத்தும் டொனெட்ஸ்கின் சிறிய பகுதியிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறுமாறு ட்ரம்ப் உக்ரைன் நிர்வாகத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதுவே புடின் தொடர்ந்து முன்வைத்து வரும் கோரிக்கை, ஆனால் உக்ரைன் மக்கள் அதை மொத்தமாக நிராகரித்துள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய விவகாரத்தில் அமெரிக்க, உக்ரேனிய மற்றும் ஐரோப்பியப் பிரதிநிதிகள் திங்களன்று பெர்லினில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரு விரிவான ஒருமித்த கருத்தை எட்டியதாக தகவல் கசிந்துள்ளது.

எதிர்கால ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பிற்கான வலுவான அமெரிக்க ஆதரவுடனான உத்தரவாதங்கள் இதில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அப்படியான உத்தரவாதங்கள், ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்குப் பிரதேசங்களை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்வதைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |