ரஷ்யாவிற்கு ஆணையிடுவதை ட்ரம்ப் நிறுத்த வேண்டும்... விளாடிமிர் புடின் வெளிப்படையாக எச்சரிக்கை
உக்ரைன் அமைதிப்பேச்சுவார்த்தை தொடர்பில் ரஷ்யாவிற்கு நிபந்தனைகளை ஆணையிட முயற்சிப்பதை டொனால்ட் ட்ரம்ப் நிறுத்துமாறு புடின் எச்சரித்துள்ளார்.
ட்ரம்பிற்கு எதிராக
ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்று முன்னெடுத்த நேர்காணலில் ஜனாதிபதி புடின் உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்பிற்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதை முடிக்க தாம் திட்டமிட்டுள்ளதாக வலியுறுத்திய புடின், போரை நிறுத்துவதற்கான அமெரிக்க விதிகளை ட்ரம்ப் தன்னிடம் திணிக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
அமெரிக்க மக்களுக்கும், அங்குள்ள ஜனாதிபதி உட்பட அதன் தலைவர்களுக்கும் டெஹெச நலன் சார்ந்த சொந்த விருப்பங்கள் உள்ளன. அதை நாம் மதிக்கிறோம். ஆனால், அதேப்போன்று நம்மையும் அவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் திங்கட்கிழமை விளாடிமிர் புடினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்புகொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையிலேயே, ரஷ்ய செய்தி ஊடகம் புடினின் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணல், உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்ப் தொடர்புகொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், வெளியிடப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 5,000 பேர்கள்
2022 ல் தொடங்கப்பட்டதை ரஷ்யாவிற்கு சாதகமான வகையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தங்களிடம் போதுமான பலமும் வளமும் இருப்பதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பிப்ரவரி 2022 முதல் அவரது இராணுவ நடவடிக்கை பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மொழி பேசும் உக்ரேனியர்களைக் கொன்றுள்ளது என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.
திங்களன்று பகல் 10 மணிக்கு விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். வாரத்திற்கு சுமார் 5,000 பேர்கள் வரை கொல்லப்படும் இந்த இரத்தவெறிப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
புடினுடன் உரையாடியதன் பின்னர், உக்ரைன் ஜனாதிபதியுடனும் நேட்டோ தலைவர்களுடனும் பேச முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி அனைத்தும் முடிவுக்கு வரும் என நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |