உக்ரைனுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டாம்., தென் கொரியாவுக்கு புடின் எச்சரிக்கை
ரஷ்யாவுக்கு எதிரான போரில் தென்கொரியா உக்ரைனுக்கு ஆயுதம் கொடுத்தால் அது மிகப்பாரிய தவறு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து யோசித்து வருவதாக தென் கொரியா கூறியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் புதின் இவ்வாறு கூறியுள்ளார்.
வியட்நாம் பயணத்தின் போது, புடின் செய்தியாளர்களிடம் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கினால், தென் கொரியாவின் தற்போதைய தலைமையை மகிழ்விக்காத நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று கூறினார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கினால், வடகொரியாவுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கும் என்றும் புடின் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் எங்களுடன் போரில் ஈடுபடவில்லை என்ற மாயையில் இருப்பதாக புதின் கூறினார்.
வட கொரியா மற்றும் ரஷ்யா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து தென் கொரியா கவலைப்பட தேவையில்லை என்றும் புடின் கூறினார்.
தென் கொரியாவுக்கு எதிராக வடகொரியா எந்த தாக்குதலையும் திட்டமிடவில்லை என்று புதின் கூறினார். இதனுடன், ஆசியாவில் ரஷ்யாவிற்கு நேட்டோ அச்சுறுத்தலை உருவாக்குகிறது என்று புடின் குற்றம் சாட்டினார்.
ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
இரு தினங்களுக்கு முன்பு, ரஷ்ய ஜனாதிபதி புதின் வட கொரியாவுக்கு விஜயம் செய்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இப்போது எந்த நாடும் வடகொரியா அல்லது ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும்.
அத்தகைய சூழ்நிலையில் இரு நாடுகளும் இணைந்து போரிடும். புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு 'Alliance' என கிம் ஜாங் உன் பெயரிட்டுள்ளார்.
வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தால் தென்கொரியா வருத்தமடைந்து ரஷ்ய தூதரிடம் தனது எதிர்ப்பை தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு எதிரானது என தென்கொரியா கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தம் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகவும் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது ரஷ்யா-தென்கொரியா உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
புடினின் அச்சுறுத்தலுக்குப் பின் தென் கொரியாவின் பதில்
இதைத் தொடர்ந்து, ‘உக்ரைனுக்கு ஆயுதம் கொடுப்பது’ குறித்து இப்போது தங்கள் நாடு பரிசீலித்து வருவதாக தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாங் ஹோ-ஜின் கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine North Korea Alliance, Russian-North Korean agreement, Ukraine South Korea vs Russia South Korea