உக்ரைனின் கார்கிவ் நகரில் தொடர் தாக்குதல்; பாராசூட் மூலம் தரையிறங்கிய ரஷ்ய படை!
உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவில் (Kharkiv) நேற்று ஷெல் தாக்குதல் நடத்திய ரஷ்யா, இன்று அதன் வான்வழி துருப்புகளை பாராசூட் மூலம் தரையிறக்கி தாக்குதலை தொடர்ந்துவருகிறது.
உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ் நகரில் இன்று காலை இராணுவ மருத்துவமனையை தாக்கியதை அடுத்து, பொலிஸ், அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு சேவையை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்திவருகின்றனர். அதன்படி உக்ரைனில் இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக கடுமையான சண்டை நடந்து வருகிறது.
கராசின் (Karazin) தேசிய பல்கலைக்கழகத்தின் மீது இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால், பல்கலைக்கழக கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது, மற்றும் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அருகில் இருந்த அண்டை பொலிஸ் தலைமையகம் அல்லது உள்துறை அமைச்சக கட்டிடத்தை தாக்கும் நோக்கில் ஏவப்பட்டதாக நம்பப்படும் ஏவுகணை, அதற்கு பதிலாக கல்லூரியின் சமூகவியல் துறை கட்டிடத்தை தாக்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கார்கிவ் மீது நடந்த ஷெல் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் கூறினார். '
கார்கிவில் இன்னும் பீரங்கி குண்டுகள் தாக்காத பகுதிகள் எதுவும் இல்லை' என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையே உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சன் நகரத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகக் கூறுகிறது.