இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலடி உறுதி: கத்தார் பிரதமர் திட்டவட்டம்
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பிராந்திய நட்பு நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கத்தார் பிரதமர் அல்-தானி தெரிவித்துள்ளார்.
வலுவான நடவடிக்கை
கத்தார் மீதான தாக்குதல் தொடர்பில் பதிலளித்துள்ள பிரதமர் அல்-தானி, பிராந்தியத்திலிருந்து பதிலடி உறுதி. தற்போது பிராந்தியத்தில் உள்ள மற்ற நட்பு நாடுகளுடன் ஆலோசனை மற்றும் விவாதத்தில் இருப்பதாகவும் அல்-தானி தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் தோஹாவில் அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும் என்றும், அதில் பங்கேற்கும் தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வார்கள் என்றும் அல்-தானி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் மற்ற பிராந்திய நட்பு நாடுகளை தனிப்பட்ட வழியில் பதிலளிக்க கத்தார் கோராது என்றும் அல்-தானி தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் இப்படியான கொடுமைப்படுத்துதலைத் தொடர்வதைத் தடுக்கும் ஒரு வலுவான நடவடிக்கையை முன்னெடுக்க கத்தார் முடிவு செய்துள்ளதாகவும், அதை எதிர்பார்ப்பதாகவும் அல்-தானி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர், உலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு என ஒரு குழுவை ஹமாஸ் படைகள் உருவாக்கினால், அந்தக் குழுவினரை குறிவைத்து தாக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் இதுவரை தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளது.
நெதன்யாகுவின் திட்டம்
ஈரான் விவகாரத்திலும், பேச்சுவார்த்தைக்கு என தயாரான குழுவினரை இஸ்ரேல் தாக்கியுள்ளது. தற்போது இஸ்ரேலின் ஜனாதிபதியே, ஒப்பந்தத்தில் உடன்படாதவர்களை நீக்குவதில் தவறில்லை என்பது போன்ற கருத்தை பதிவு செய்துள்ளது இஸ்ரேலின் கொடூர திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும், காஸாவை மொத்தமாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு கத்தார் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கத்தாரை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இதுவரை எந்த இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்காத நிலையில், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நெதன்யாகு இராணுவம் கத்தார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், கத்தாரில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், முன்கூட்டியே கத்தாரிடம் தகவல் தெரிவித்திருந்தது. ஆனால், இஸ்ரேல் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அமெரிக்காவும் மெளன அனுமதி அளித்திருப்பது கத்தார் மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளை இஸ்ரேலுக்கு எதிராக வலுவான நடவடிக்கைக்கு தூண்டியுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |