முக்கிய வாடிக்கையாளர்களுக்காக... ஹார்முஸ் ஊடாக சத்தமின்றி கத்தார் நடத்திய ஏற்றுமதி
ஹார்முஸ் நீரிணை ஏறக்குறைய முழுமையாக மூடப்பட்டிருந்தபோதிலும், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் தங்கள் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு எரிபொருளை அனுப்பி வைத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவை நோக்கி
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றிச் சென்ற மூன்று கப்பல்கள் அண்மைய நாட்களில் ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றிருப்பதாகத் தெரியவருகிறது.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அல் ரய்யான் கப்பலானது ஹார்முஸ் நீரிணையைக் கடந்ததன் பின்னர் ஓமானின் மஸ்கட் நகருக்கு வடக்கே காணப்பட்டுள்ளது; அது சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது.
பாரசீக வளைகுடாவில் உள்ள கத்தாரின் ராஸ் லஃபான் ஏற்றுமதி ஆலைக்கு அருகில், மே 22 வாக்கில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தபோது, சமிக்ஞைகளை அனுப்புவதை நிறுத்தியதாகவும் கூறபப்டுகிறது.
கடந்த ஆண்டு அதிக அளவு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை கத்தாரில் இருந்தே சீனா வாங்கியுள்ளது. மார்ச் மாத இறுதியில் கத்தார் எரிவாயுவை ஏற்றிய மற்றொரு கப்பலும், ஞாயிறுக்கும் திங்கள்கிழமைக்கும் இடையில் அந்த நீர்வழிப்பாதையைக் கடந்தது.
ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் நிலையில் ரகசியமாக புறப்பட்ட இந்தக் கப்பல், பின்னர் மஸ்கட்டின் வடக்கே மீண்டும் காணப்பட்டது. இந்தக் கப்பலானது பாகிஸ்தானுக்கு செல்வதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இழுபறியாக நீடிப்பதால், இரு தரப்பினரும் அந்த நீர்வழியில் நடைமுறைத் தடையை அமுல்படுத்தி, ஹார்முஸ் நீரிணையை கிட்டத்தட்ட மூடியே வைத்துள்ளனர்.
LNG ஏற்றுமதியாளர்கள்
இதனால், கப்பல்கள் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன; மேலும், கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அந்த நெருக்கடிப் பாதை வழியாக நடைபெறும் பெரும்பாலான பயணங்கள், சமிக்ஞை அனுப்பும் கருவிகள் (transponders) அணைக்கப்பட்ட நிலையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து அப்பிராந்தியத்திலேயே முடங்கிக் கிடக்கும் எரிபொருளை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை, பாரசீக வளைகுடாவில் உள்ள LNG ஏற்றுமதியாளர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும், இப்படியான இந்தப் போக்குவரத்து போருக்கு முந்தைய எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதி மட்டுமே.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, இதுவரை ஏழு LNG சரக்குக் கப்பல்கள் மட்டுமே அப்பாதையைக் கடந்து சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது; இந்த மோதல் தொடங்குவதற்கு முன்பு, தினமும் சுமார் மூன்று LNG கப்பல்கள் அப்பாதையின் வழியாக வெளியேறி வந்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |