நோயினால் அவதியுற்ற குழந்தை: எலிசபெத் மகாராணியின் உறவினர் எடுத்த பயங்கர முடிவு
தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.
மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் சகோதரி முறை உறவினரான பெண்ணொருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றுவந்த தன் குழந்தையைக் கொன்றதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நோயினால் அவதியுற்ற குழந்தை
எலிசபெத் மகாராணியின் சகோதரி உறவு முறையினரான எலிசபெத் ஆலிஸ் வைஸ் (89), இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆலிஸ் வைஸைக் குறித்து நினைவுகூரும்போது, அவரது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக அவர் தனது குழந்தையைக் கொன்ற விடயம் நினைவுகூரப்படுவதை மறுப்பதற்கில்லை.
ஆலிஸ் வைஸுக்கு 36 வயது இருக்கும்போது, அவர், எம்மா சார்லட் என்னும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நீண்ட காலம் காத்திருந்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து பெற்ற தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தார் ஆலிஸ் வைஸ்.
துரதிர்ஷ்டவசமாக, பிறந்து ஒன்பதே நாட்களில் சார்லட்டை வைரஸ் காய்ச்சல் தாக்கியது. இருபத்து நான்கே மணி நேரத்தில் கோமாவுக்குச் சென்றாள் சார்லட்.
வைரஸ் பதிப்பு மூளையை எட்ட, மருத்துவமவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் குழந்தையை விட்டு அக்கம் பக்கம் நகரவில்லை ஆலிஸ் வைஸ். வைரஸ் தொற்று காரணமாக, குழந்தையின் மூளை அனுப்பும் தகவல்கள் அதன் கை கால்களை எட்டவில்லை.
அவளது வயிறும் தசைகளும் சரியாக வேலை செய்யாததால், குழந்தைக்கு மிகமெதுவாகவே உணவு ஊட்ட முடிந்தது. இல்லையென்றால் குழந்தை வாந்தியெடுக்கத் துவங்கிவிடுவாள்.
வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட ஆலிஸ் வைஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
சில மாதங்களில் வைரஸ் தொற்று குழந்தையின் மூளையின் முக்கால் பாகத்தை நாசம் செய்துவிட்டது.
அப்போது ஒரு முடிவெடுத்தார் ஆலிஸ் வைஸ். ஆம், இப்படி தன் குழந்தை அவஸ்தைப்படுவதைக் காண சகிக்காமல், குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்தார் அவர்.
1974ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 3ஆம் திகதி, தன் மகள் தூக்கத்தில், அமைதியாக, வலியில்லாமல் இந்த உலகத்தை விட்டுக் கடந்து செல்லட்டும் என, அவளுக்கு அவளுக்கு மீறி தூக்கமாத்திரைகளைக் கொடுத்தார் ஆலிஸ் வைஸ்.
சில மாதங்களுக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் தன் குழந்தையைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார் ஆலிஸ் வைஸ்.
அவர் குழந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிந்திருந்ததால், அவர் மீது பலரும் இரக்கப்பட்டார்கள்.
நீதிபதியும், இது வழக்கத்துக்கு மாறான வழக்குகளிலேயே மிகவும் அசாதாரண வழக்கு என்று கூறி, ஆலிஸ் வைஸுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கினார். ஆனால், அவர் சிறை செல்லவேண்டியதில்லை என்றும், ஓராண்டுக்கு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
ஆலிஸ் வைஸ், தனது 89ஆவது வயதில், யார்க்ஷையரிலுள்ள ஒரு மருத்துவமனையில், இம்மாதம் 2ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |