சுவிஸ் குடியுரிமை: சில முக்கியமான கேள்விகளும் பதில்களும்
சுவிஸ் குடியுரிமை பெற்றவர்கள், வேறொரு நாட்டில் சென்று வாழ முடிவு செய்தால் என்னவாகும் என்பது தொடர்பான கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதிலளிக்கிறது.
சுவிஸ் குடியுரிமை பெற்றவர்கள் வேறொரு நாட்டுக்குச் சென்று வாழ்வது சாத்தியமா?
சுவிஸ் குடியுரிமை பெற்றவர்கள் பணி நிமித்தமாகவோ, கல்வி, குடும்பச் சூழல் அல்லது வேறொரு நாட்டில் வாழலாம் என்னும் ஆசை காரணமாகவோ வேறொரு நாட்டுக்குச் சென்று வாழ முடிவு செய்தால், அது சாத்தியமா? வேறொரு நாட்டுக்குச் செல்லும் முன் இவ்வளவு காலம் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்னும் விதி ஏதேனும் உள்ளதா?
இந்த கேள்விகளுக்கான பதில், இல்லை என்பதுதான். அதாவது, சுவிஸ் குடியுரிமை பெற்றவர்கள் வேறொரு நாட்டுக்குச் செல்லும் முன் இவ்வளவு காலம் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்னும் விதி எதுவும் இல்லை.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இப்போதுதான் புதிதாக குடியுரிமை பெற்றவர்கள், பல ஆண்டுகளுக்கு முன் குடியுரிமை பெற்றவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. சட்டத்தின் பார்வையில், அவர்கள் அனைவருமே சுவிஸ் குடிமக்கள்தான்!
ஆக, சுவிஸ் குடியுரிமை பெற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வேறொரு நாட்டுக்குச் செல்லலாம், எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம் (நீங்கள் ஏதேனும் குற்றவியல் விசாரணைக்குட்பட்டிருத்தல் போன்ற காரணங்கள் தவிர்த்து).
சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறுவதற்கு முன், உங்கள் வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தல், தபால் டெலிவரியை ரத்து செய்தல் போன்ற வழக்கமான விடயங்களுடன், சில முக்கிய விடயங்களையும் நீங்கள் செய்யவேண்டியிருக்கும்.
அவற்றில் ஒன்று, நீங்கள் நாட்டை விட்டு செல்வதை அதிகாரிகளிடம் பதிவு செய்தல். அந்த ஆவணங்களை மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தில் சமர்ப்பித்தல், அதாவது பாலிசியை ரத்து செய்தல்.
அடுத்து, வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைக் குறித்து தெரியப்படுத்துதல்.
இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் செய்யவேண்டிய விடயங்கள்
இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போர், தங்கள் சொந்த நாட்டிலோ அல்லது சுவிட்சர்லாந்தின் இன்னொரு பகுதியிலோ அரையாண்டு காலத்தை செலவிட விரும்பக்கூடும்.
அது உங்கள் திட்டமானால், உங்கள் முதன்மை வாழும் நாடு எது என்பதை நீங்கள் தீர்மானிக்கவேண்டும். (அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரி, தன் முதன்மை நாடு அமெரிக்கா என தீர்மானித்தது நினைவிருக்கலாம்).
நீங்கள் வேறொரு நாட்டுக்கே சென்றுவிட்டீர்கள். ஆனால், மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு வர விரும்புகிறீர்கள். அப்படியானால் என்ன செய்வது?
நீங்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றபின், சுவிட்சர்லாந்தைவிட்டே சென்றுவிட்டீர்களோ அல்லது பல ஆண்டுகள் வேறொரு நாட்டில் வாழ்ந்துவந்தீர்களோ, எப்படியானாலும், நீங்கள் சுவிட்சர்லாந்துக்குத் திரும்பி வர விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் சுவிட்சர்லாந்துக்குத் திரும்பிவரலாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |