கழுத்தை பதம் பார்த்த வெளவால்... 65 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த முதல் மரணம்
அமெரிக்காவில் நோய் பாதித்த வெளவால் கடித்து முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
குறித்த முதியவர் வசிக்கும் அமெரிக்க மாகாணத்தை பொறுத்தமட்டில் 1954ம் ஆண்டிற்கு பிறகு இது முதல் மரணம் என கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இல்லினாய்ஸ் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பு இது குறித்து தெரிவிக்கையில்,
80 வயதைக் கடந்த குறித்த நபர் தமது குடியிருப்பில் தூக்கத்தில் இருந்ததாகவும், திடீரென்று கண்விழித்து பார்க்கையில், அவரது கழுத்தில் வெளவால் ஒன்று கடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த வெளவால் மீட்கப்பட்டு உரிய பரிசோதனைக்கு உட்படுத்தியதில் ரேபிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, குறித்த முதியவர் ரேபிஸ் தொடர்பான சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரது குடியிருப்பை சோதனை செய்த அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வெளவால் பெருங்கூட்டம் ஒன்றை அவரது குடியிருப்பில் அதிகாரிகள் தரப்பு கண்டுபிடித்தனர்.
இதனிடையே, அவருக்கு கழுத்து வலி, தலைவலி மற்றும் உணர்வின்மை, அத்துடன் அவரது கைகளை இயக்குவதில் சிரமம் மற்றும் பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து அவர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது அந்த முதியவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ரேபிஸ் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை அளிக்கப்படும் என உள்ளூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.