RAF ஃபேர்ஃபோர்ட் சம்பவம்... பிரித்தானியா-ஈரான் இரட்டை குடியுரிமை கொண்டவர் கைது
UK-Iranian dual national arrested: பிரித்தானியா-ஈரான் இரட்டைக் குடியுரிமை கொண்டவர் கைது செய்யப்பட்டார்.
RAF ஃபேர்ஃபோர்டில் நடந்த சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டதாகக் கருதப்படும் பிரித்தானியா மற்றும் ஈரானியக் குடியுரிமை கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐந்து இளைஞர்கள்
25 வயதான அந்த நபர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் கைது செய்யப்பட்டார். அப்பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை குளோசெஸ்டர்ஷயர் விமானப்படைத் தளத்திற்கு அருகே கைது செய்யப்பட்ட, ஐந்து இளைஞர்கள் காவல்துறை பிணையில் உள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் லண்டனைச் சேர்ந்த பிரித்தானியர்கள். இந்த நிலையில், வெளிநாட்டு சதி உள்ளிட்ட அனைத்து சாத்தியமான கோணங்களையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பரிசீலித்து வருவதாக, அப்பிரிவின் மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் விக்கி எவன்ஸ் தெரிவித்தார்.
இதனிடையே, பிரித்தானியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை கொண்ட அந்த நபரின் வயது 27 என்றும், மற்றொரு நபர் எச்சரிக்கையுடன் கூடிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் காவல்துறையினர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர்; ஆனால், பின்னர் அளித்த தகவலில் அது உண்மையில்லை என்று கூறினர்.
RAF ஃபேர்ஃபோர்ட் சம்பவத்தில் ஈரானுக்கு பங்கிருப்பதற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாகப் பிரதமர் ஆன்டி பர்னாம் புதன்கிழமையன்று கூறியிருந்தார்.
அவர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை; ஆனால், இதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்க விமானப்படையால் (USAF) இயக்கப்படும் தளத்தை நோக்கி மூன்று சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் சென்றதாகத் தகவல் வெளியாகிப் பெரும் பாதுகாப்புச் சூழலை உருவாக்கியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

வாகனங்களுக்கு அருகே முகமூடி அணிந்த ஒரு குழு இருப்பதை உள்ளூர் விவசாயி ஒருவர் பொலிசாருக்குத் தெரிவிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, அந்த ஐவரில் ஒருவர் தாமே 999 இலக்கத்திற்கு அழைத்திருந்தார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அந்த இடத்திற்கு அருகில் இருந்த வேன்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது, குறிப்பிட்ட அளவு பெட்ரோல் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்தக் குழுவில் இருந்தவர்களின் வயது 23 முதல் 25-க்கு இடைப்பட்டதாகவும், அவர்களில் நால்வர் வெஸ்ட்மின்ஸ்டரிலும் ஒருவர் கேம்டனிலும் வசிப்பதாகவும்; அவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.