ஈரானின் ஏவுகணை இலக்கு... பிரித்தானியாவின் அந்த இராணுவத் தளம்: தூதர் விடுத்த எச்சரிக்கை
மத்திய கிழக்கில் போர் சூழல் மிக மோசமாக மாறியுள்ள நிலையில், பிரித்தானியா தொடர்புடைய இராணுவத் தளங்கள் ஈரான் ஏவுகணைக்கு இலக்காகலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
RAF ஃபேர்ஃபோர்டு
லண்டனுக்கான ஈரான் தூதர் சையத் அலி மூசாவி தெரிவிக்கையில், அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தளங்கள் சாத்தியமான இலக்குகளாக இருக்கலாம் என்று எச்சரித்தார்.

கடந்த மாதம் போர் வெடித்ததிலிருந்து, அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுப்பதற்காக RAF ஃபேர்ஃபோர்டு மற்றும் டியாகோ கார்சியா தளங்களை ஏற்கனவே பயன்படுத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நிராகரித்த நிலையில், ஹார்முஸ் நீரிணையும் முடக்கப்பட, பிரித்தானியா தனது முடிவை மாற்றியது.
இந்த நிலையில் தற்போது ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இது நாங்கள் பரிசீலித்து வரும் மிக முக்கியமான விடயம் என மூசாவி டைம்ஸ் வானொலியில் குறிப்பிட்டுள்ளார்.
இது எங்கள் தற்காப்புக்கு மிகவும் முக்கியமான ஒரு விடயம். எங்களது நிர்வாகத்தின் இராணுவப் பிரிவுகள் தகுந்த முறையில் முடிவெடுக்கும் என்றார்.

ஏவுகணைத் தாக்குதல்களால் பிரித்தானியா பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் வேளையில், பிரித்தானியாவிடம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த அதிரவைக்கும் கருத்து வெளியாகியுள்ளது.
அச்சுறுத்தலாக உள்ளது
ஈரானிடம் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் இல்லை என நம்பியிருந்த நிலையில், கடந்த மாதம் ஈரான் டியாகோ கார்சியாவை நோக்கி இரண்டு ஏவுகணைகளை ஏவியது, அதில் ஒன்று இடைமறித்துத் தடுக்கப்பட்டது, மற்றொன்று பயணத்தின் பாதியிலேயே செயலிழந்தது.
இதனையடுத்து பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், பிராந்தியம் முழுவதும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதும், ஹார்முஸ் நீரிணையைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்திருப்பதுமான ஈரானின் பொறுப்பற்ற தாக்குதல்கள், பிரித்தானியாவின் நலன்களுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்ததை அடுத்து உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனையடுத்து நட்பு நாடுகள் அனைத்தும் உதவ முன்வர வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்தார்.
ஆனால், பிரித்தானியா உட்பட எந்த நாடும் ஈரான் போரில் தலையிட மறுத்தது. இதில் கோபமடைந்த ட்ரம்ப், நீங்களே உங்களுக்காகப் போராடக் கற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும்; இனிமேல் உங்களுக்கு உதவ அமெரிக்கா முன்வராது என்றார்.
ஈரான் மொத்தமாக சிதைக்கபப்ட்டு விட்டது, அதன் பெரும்பகுதியை அழித்து விட்டோம் என தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |