இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு: பாதுகாப்பிற்காக தயார் நிலையில் ரபேல் போர் விமானங்கள்
முக்கியமான உலக தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டின் பாதுகாப்பிற்காக ரபேல் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜி20 உச்சி மாநாடு
செப்டம்பர் 9 மற்றும் 10 திகதிகள் உலக தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 மாநாடு மத்திய டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா தலைமை தாங்கும் இந்த ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா பிரித்தானியா, ஜப்பான், சவூதி அரேபியா, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா ஆகிய பல முக்கிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு முக்கியமான உலக தலைவர்கள் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால், மத்திய அரசு பல அடுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வான் தாக்குதல் தடுப்பு சாதனங்கள் ஜி20 மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றி நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் எத்தகைய வான் தாக்குதலையும் முறியடிக்கும் வகையில், இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் டெல்லியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நேத்ரா என்ற கண்காணிப்பு விமானம் டெல்லி நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளது.
ரபேல் போர் விமானத்தின் சிறப்பம்சம்
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரபேல் போர் விமானம் சுமார் 2 ஆயிரத்து 223 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
ரபேல் விமானம் 15.3 மீட்டர் நீளம், 5.3 மீட்டர் உயரம், 10 டன் எடையும் (அதாவது 10,000 கிலோ) கொண்டது, இதன் இறக்கைகள் நீளம் மட்டும் 10 மீட்டர் நீளமுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரபேல் விமானத்தில் எரிபொருளும், ஆயுதங்களும் நிரப்பப்பட்டால் சுமார் 24,500 கிலோ கொண்டதாக அதன் எடை அதிகரிக்கும். ரபேல் விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டரை கடக்க முடியும்.
கிட்டத்தட்ட 731 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ரபேல் விமானத்தின் மூலம் 24 மணி நேரத்தில் 5 முறை தாக்குதல் நடத்த முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |