உடல் முழுவதும் தீப்பற்றியெரிய... காட்டுத்தீக்குள் வெளிப்பட்ட நபர்: திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்
ஸ்பெயின் நாட்டில் காட்டுத்தீக்குள் சிக்கி, உடைகள் முழுவதும் தீப்பற்றியெரிய மீட்கப்பட்ட நபர் உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்கிரமாக பற்றியெரிந்த காட்டுத்தீயில் இருந்து தப்பிய நபர் 50 வயதான Angel Martin Arjona என தெரிய வந்துள்ளது. தமது குடியிருப்பை காட்டுத்தீயில் இருந்து காப்பாற்ற, குடியிருப்புக்கு சுற்றும் அவர் அகழி அமைத்துக் கொண்டிருந்துள்ளார்.
ஆனால் திடீரென்று காற்று அவர் பக்கம் பலமாக வீச, கொழுந்துவிட்டெரிந்த காட்டுத்தீயில் Angel Martin Arjona சிக்கியுள்ளார். இதில் அவர் சில நொடிகள் பார்வையில் இருந்து மாயமானதாகவும் நேரில் பார்த்த நபர் கூறியுள்ளார்.
ஆனால், அதிசயமாக அந்த 50 வயது நபர் உடைகள் மொத்தம் தீப்பற்றியெரிய காட்டுத்தீயில் இருந்து வெளிப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவசரமாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குடும்ப நண்பர் ஜோஸ் தாபா தெரிவிக்கையில். அவர் வல்லாடோலிடில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார், இருப்பினும் அவரது மனைவியுடன் அவர் பேசினார் என தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருக்கிறார் என்றே மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. ஸ்பெயின் நாட்டில் கடந்த இரு வாரங்களாக வெப்பநிலை அதிகரித்தே காணப்படுகிறது.
ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை காட்டுத்தீயில் சிக்கி இருவர் மரணமடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.