ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள்: ரசிகர்கள் அவதி
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் மோசமாக இருந்ததால் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி
சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மோசமாக இருந்ததாகவும், இதை மறக்கவே முடியாது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சியானது மழையின் காரணாமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏ.ஆர்.ரகுமானின் 30 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டது.
ஏற்பாடுகள் மோசம்
இந்த இசை நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இதனால், நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பார்க்கிங்கிற்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர், நெரிசல் காரணமாக திரும்பிச் சென்றுள்ளனர்.
அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்த காரணத்தினால் தான், ரூ.1000 டிக்கெட் வாங்கியவர்கள் வேறொரு இருக்கைக்கு சென்றது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மோசமான ஆடியோ சிஸ்டம் மூலம் பாடலை சரியாக கேட்கமுடியவில்லை எனவும், விஐபிக்களுக்கு மட்டும் நல்ல கவனிப்பு இருந்தது எனவும் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |