ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை! குஜராத் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், குஜராத் அரசு மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்தவர் உள்ளிட்டோர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
ராகுல் காந்தி வழக்கு கடந்து வந்த பாதை
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து கருத்துக்களை கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பில் சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதில், ராகுல் காந்தி எம்.பி பதவியை இழந்தார்.
பின்பு, அவதூறு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இடைக்கால தடை விதிக்க கோரி சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
இதனையடுத்து , அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் சிறை தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றும், அதில் தலையிட முடியாது என்றும் கூறியது. இதனை தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், வழக்கு சரியான முறையில் விசாரணை நடைபெறாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும், மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். பின்பு, இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஜூலை 21 ஆம் திகதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில், ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |