ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்ற கார் தடுத்து நிறுத்தம்.., பரபரப்பான மாநிலம்
சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கார் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் நிறுத்தம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதி உள்ள இடத்தில் கோயில் இருந்ததாகவும், கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் கூறி உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், மசூதியை ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமித்தது. இதையடுத்து, நவம்பர் 19 -ம் திகதி அன்று பொலிஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். பின்னர், 24 -ம் திகதி அன்று எதிர்ப்புக்கு மத்தியில் ஆய்வு குழுவினர் மீண்டும் சென்றனர்.
ஆனால், அப்போது அவர்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று செல்ல முயன்றனர்.
ஆனால், அவர்களது காரானது எல்லையில் வைத்து காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக, "அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சம்பல் பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை" என உத்தரபிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |