ஊரடங்கு நேரத்தில் இப்படியா செய்வது? பிரபல கிரிக்கெட் வீரரின் செயலால் ரசிகர்கள் அதிருப்தி
கொரோனா ஊரடங்கின் போது காரில் ஊர் சுற்றி வந்த கொல்கத்தா அணி வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து பல ஊர்களில் ஊரடங்கு முறை நடைமுறையில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருபவர் இளம் வீரர் ராகுல் திரிபாதி.
இவர் களத்திற்கு வெளியில் மிகவும் ஜாலியான மனிதர், நேர்மையாக நடந்துகொள்பவர், அடுத்தவரின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சி அடைபவர் என சக வீரர் பேட் கம்மின்ஸ் சமீபத்தில் புகழ்ந்து தள்ளியிருந்தார்.
ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக அவர் தற்போது நடந்துக்கொண்டுள்ளார். திரிபாதி தற்போது புனேவில் வசித்து வருகிறார்.
மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் ஜுன் 15ம் திகதி வரை ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் திரிபாதி நேற்று எந்தவித சரியான காரணமும் இன்றி காரில் ஊர் சுற்றி வந்துள்ளார். அதுவும் மாஸ்க் போடாமல் வலம் வந்துள்ளார்.
அவருடன் மற்றொரு நபரும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் கோத்வா பகுதியில் காரில் சுற்றி வந்த போது அம்மாவட்ட பொலிசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அவரிடன் எதற்காக ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்தீர்கள் என பொலிசார் கேட்ட கேள்விக்கு ராகுல் திரிபாதி சரியான பதிலை கொடுக்கவில்லை.
மேலும் மாஸ்க் அணியாமலும் இருந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து, அதற்கான ரசீதையும் அவரிடம் கொடுத்துள்ளனர்.
இந்த விடயத்தை அறிந்த ரசிகர்கள், முன் உதாரணமாக இருக்க வேண்டிய திரிபாதி போன்ற பிரபலங்கள் இப்படி செய்யலாமா என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.