ரயில்களில் செல்போனை சார்ஜ் செய்ய கட்டுப்பாடு; இரவு நேர பயணிகளுக்கு சிரமம்
railway bans phone charging in train at night time: அனைத்து ரயில்களிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்ய கட்டுப்பாடு
இந்தியாவில், அனைத்து ரயில் பெட்டிகளிலும் செல்போன் மற்றும் மடிக்கணினிகளைச் சார்ஜ் செய்வதற்கான வசதி உள்ளது.
கடந்த அக்டோபர் 24ஆம் தேதி மும்பை - ஹவுரா மெயில் ரயிலில், B-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர், தனது பவர் பேங்க்கை சார்ஜிங் பாயிண்ட்டில் இணைத்துவிட்டு உறங்கியுள்ளார்.

அதிகாலை சுமார் 3.38 மணியளவில், பவர் பேங்க் வெடித்ததில் தீப்பற்றியதுடன், பெட்டி முழுவதும் புகை பரவியுள்ளது. இதனால் தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது.
ரயில் நிறுத்தப்பட்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மற்றும் ரயில்வே வணிகப் பிரிவு ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது தீ பரவும் அபாயம் இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரவு நேரங்களில் சார்ஜிங் பாயிண்ட்டில் மின் இணைப்பை துண்டிக்க ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, அனைத்து ரயில்களிலும் உள்ள செல்போன் சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டாலும் அதனை முறையாக பின்பற்றாமல் சமீபத்தில் பவர் பேங்க் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததால், மீண்டும் அதனை தீவிரமாக பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், இரவு நேர ரயில் பயணம் செய்யும் பயணிகள் சிரமத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதால், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்கள் செல்போனில் போதிய சார்ஜ் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.