பலரை பலிவாங்கிய ஏவுகணையில் பொறிக்கப்பட்ட அந்த வாசகம்: ரஷ்யர்களின் கொடூர முகம் அம்பலம்
உக்ரைனில் ரயில் நிலையம் ஒன்றில் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து பலர் கொல்லப்பட காரணமான சம்பவத்தில் முக்கிய பின்னணி கசிந்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரயில் நிலையம் ஒன்றில் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது ரஷ்யா. இதில் நான்கு சிறார்கள் உட்பட 39 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 87 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
குறித்த ரயில் நிலையம் ஊடாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவரும் நிலையில், பழி தீர்க்கும் வகையில் ரஷ்ய துருப்புகளால் இந்த ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த ஏவுகணையில் பொறிக்கப்பட்டிருந்த அந்த வாசகம் உக்ரைன் மக்களை கொதிப்படைய வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ரஷ்ய மொழியில், எங்கள் பிள்ளைகளுக்காக என அந்த ஏவுகணையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாட்டின் கிழக்கில் உக்ரைன் நிர்வாகம் அட்டூழியங்களை மேற்கொள்வதாக ரஷ்ய துருப்புக்களை மூளைச்சலவை செய்வதற்காகவே இது போன்ற நாடகம் முன்னெடுக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
சோவியத் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை அது எனவும், 200 முதல் 500 அடி தூரத்தில் ஏவக்கூடியது எனவும் இராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ரயில் நிலையம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதுபோன்ற ஏவுகணை உக்ரைன் வசமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல் நடந்த போது அந்த ரயில் நிலையத்தில் சுமார் 4,000 மக்கள் குவிந்திருந்ததாக நகர மேயர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தனது துருப்புக்களை குவித்து வருவதால் பெரும்பாலான பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.