ஜாஸ் பட்லர் அதிரடி சரவெடி... டெல்லியை வீழ்த்திய ராஜஸ்தான்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி ராஜஸ்தானிடம் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தெரிவு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடியை தொடங்கிய ஜாஸ் பட்லர், டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக விளையாடிய பட்லர் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அவரை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவர்களின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 100 ஓட்டங்களை கடந்தது. அதிரடியாக விளையாடிய படிக்கல் 54 ஓட்டங்களில் கலீல் அஹமத் பந்துவீச்சில் வெளியேறினார்.
தொடர்ந்து அணித்தலைவர் சாம்சன் களமிறங்கினார். ஒருபக்கம் சிக்சர்களாக பறக்கவிட்ட பட்லர் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது அவரது 3-வது சதமாகும். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக அவர் அடிக்கும் 2-வது ஐபிஎல் சதம் இதுவாகும்.
இவரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 18.4 ஓவரில் 200 ஓட்டங்களை கடந்தது. 65 பந்துகளில் 106 ஓட்டங்கள் குவித்த அவர் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் குவித்தது.
223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா - டேவிட் வார்னர் வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடினர். 5 பவுண்டரி 1 சிக்சரை பறக்கவிட்ட வார்னர் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து வந்த சர்பிரஸ் கான் 1 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் நடையை கட்டினார். அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ப்ரித்வி ஷாவுடன் இணைந்து டெல்லி அணித்தலைவர் ரிஷப் பந்த் ஈடுபட்டார். 50 ஓட்டங்கள் பாட்நெர்ஷிப்பை இந்த ஜோடி கடந்தது.
இருப்பினும் ப்ரித்வி ஷா அஸ்வின் பந்துவீச்சில் போல்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் 44 ஓட்டங்களில் அவுட்டானார். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 51 ஓட்டங்கள் தேவைப்பட களத்தில் இருந்த லலித் யாதவ் உடன் பவல் ஜோடி சேர்ந்தார்.
18-வது ஓவரில் இருவரும் இணைந்து 15 ஓட்டங்கள் குவித்தனர். 19-வது ஓவரை வீசவந்த பிரசித் கிருஷ்ணா, லலித் யாதவை 37 ஓட்டங்களில் வெளியேற்றினார். அந்த ஓவரில் அவர் 1 ரன்களை கூட விட்டுகொடுக்கவில்லை.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 36 ஓட்டங்கள் தேவைப்பட அந்த ஓவரை ஓபெய் மெக்க்கோய் வீசினார். களத்தில் இருந்த பவல் முதல் 3 பந்துகளில் சிக்சர்களை விளாச ஆட்டம் சூடு பிடித்தது.
4-வது பந்தில் ரன் எதுவும் வரவில்லை. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த பவல் , இறுதி பந்தில் ஆட்டமிழக்க டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் 5-வது வெற்றியை பதிவு செய்தது.