நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்; முன்னாள் எம்.எல்.ஏ.வை அடித்து கொன்ற கிராம மக்கள்
rajasthan ex mla attar singh bhadana dies in villagers mob attack: நிலத்தை ஆக்கிரமித்து ஆலை அமைத்த மோதலில், கிராம மக்கள் தாக்கியதில் ராஜஸ்தானின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ உயிரிழந்துள்ளார்.
கிராம மக்கள் தாக்கியதில் முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம், பயானா சட்டமன்றத் தொகுதியில் 2003 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அத்தார் சிங் படானா(68).

இவர், பரத்பூர் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமித்து கல் நொறுக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருவதாக அந்த கிராம மக்கள் அவர் மீது குற்றஞ்சாட்டி இருந்தனர்.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அந்த ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் அத்தார் சிங் படானா இறங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் சுமார் 70 பேர் , அந்த ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி மாலை, அத்தார் சிங் படானா தனது ஆதரவாளர்கள் 50 பேரை அழைத்து வந்து போராட்டம் நடத்திய கிராம மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றார்.

அப்போது இரு தரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியது. கிராம மக்கள் அத்தார் சிங் படானா மற்றும் அவரது ஆதரவாளர்களை கல் மற்றும் தடியால் தாக்கியுள்ளனர்.
இதில், அத்தார் சிங் படானா மற்றும் உதவியாளர் ககன் சர்மா படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அத்தார் சிங் படானா உயிரிழந்துள்ளார்.
அத்தார் சிங் படானாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், வன்முறையில் ஈடுபட்டதாக 35 முதல் 40 கிராம மக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது. 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.