களைப்பாக இருப்பதாக வைரமுத்துவிடம் கூறிய ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவருடன் பேசியதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவரது அடிவயிறுபகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.
அதேபோல பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது.
இதையடுத்து அப்போலோ மருத்துவமனை தரப்பில் வெளியிட்டஅறிக்கையில், "நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார்.
இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் Transcatheter முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியானது.
வைரமுத்து பதிவு
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்தபோது அவரிடம் பேசியதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அன்பு நண்பர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து பேசினார். திடமாகவும் கம்பீரமாகவும் வழக்கம்போல் ஒலித்தது அவர் குரல். “எப்படி இருக்கிறீர்கள்” என்றேன். “நன்றாக இருக்கிறேன்; ஆனால், களைப்பாக இருக்கிறேன்” என்றார்.
“எப்போது வீடு திரும்புவீர்கள்” என்றேன், “ஓரிரு நாளில்” என்றார். “உள்ளம் உடல் இரண்டும் நலமுற நல்ல ஓய்வுகொள்ள வேண்டும்” என்றேன். அதிக நேரம் பேசி அவர் சக்தியைச் செலவழிக்க விரும்பவில்லை.
வாழ்த்துச் சொல்லி இணைப்பை நிறைவு செய்தேன் ஆகவே அன்பர்களே! என் உள்ளறிவு உணர்ந்தவரையில் அவர் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார்.
கடந்த சிலநாட்களாய் ஊருக்குப் போயிருந்த உங்கள் புன்னகை மீண்டும் உதட்டுக்குத் திரும்பட்டும். அந்த விறுவிறுப்பான மின்சார மனிதனை விரைவில் பார்க்கலாம். வாருங்கள் ரஜினி; காத்திருக்கிறது கலை உலகு" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |