ரூ.1 கோடியில் உருவான இராவணன் சிம்மாசனம்: 24 காரட் தங்க அலங்காரம் - ராமாயணம் படக்குழுவின் பிரம்மாண்ட சாதனை
Ramayana's Rs 1 Crore Ravana Throne Stuns Fans: ராமாயணம் திரைப்படத்திற்காக ரூ.1 கோடி மதிப்பில் தங்கத்தில் இராவணன் சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட செட் வடிவமைப்புகள்
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் பிரம்மாண்ட செட் வடிவமைப்புகள் மற்றும் கலைப்பணிகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
குறிப்பாக, இலங்கை மன்னன் இராவணனுக்காக உருவாக்கப்பட்ட சிம்மாசனம் அதன் ஆடம்பரமும் நுணுக்கமான வடிவமைப்பும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இராவணன் சிம்மாசனம்
படத்தின் கலை இயக்குநரான ரமேஷ் அளித்த தகவலின்படி, இராவணனின் அரச மரியாதையையும் அதிகாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது கணினி கிராபிக்ஸ் (VFX) மூலம் உருவாக்கப்பட்ட காட்சி அல்ல, உண்மையான பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட செட் அமைப்பாகும்.
சிம்மாசனத்தை உருவாக்கும் பணி முதலில் களிமண் மாதிரி வடிவமைப்புடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அச்சு தயாரிக்கப்பட்டு, ஃபைபர் பொருட்களைப் பயன்படுத்தி சிம்மாசனத்தின் முழு வடிவமும் உருவாக்கப்பட்டது.
24 காரட் தங்க இலை அலங்காரம்
இதன் மிக முக்கிய சிறப்பம்சமாக 24 காரட் தங்க இலை (Gold Leafing) அலங்காரம் அமைந்துள்ளது. இந்த தங்கப் பூச்சே சிம்மாசனத்திற்கு அரச கம்பீரத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சிம்மாசனத்தை கட்டி முடிக்க சுமார் நான்கு மாதங்கள் எடுத்ததாகவும், இதன் மொத்த செலவு சுமார் ரூ.1 கோடி எனவும் கலை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

150-க்கும் மேற்பட்ட செட்கள்
மேலும், Ramayana: Rise Of A Legend திரைப்படத்திற்காக 150-க்கும் மேற்பட்ட செட்கள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு செட்டும் திரையில் தோன்றும் இறுதி வடிவத்தை அடைவதற்கு முன்பு 10 முதல் 15 முறை வரை மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இராவணனின் ஆபரணங்களும் அதே அளவிலான நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கை தங்க நகரமாக கருதப்படுவதால், அந்த ஆடம்பர உணர்வை திரையில் வெளிப்படுத்தும் வகையில் பித்தளை மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டன.
இராவணனுக்காக மட்டும் 13 வித்தியாசமான ஆபரண வடிவங்கள் உருவாக்கப்பட்டதாகவும், மொத்தம் 104 முதல் 130 வரை ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
பிரம்மாண்டமான செட்கள், உயர்தர கலைப் பணி மற்றும் வரலாற்று கதாபாத்திரங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வடிவமைப்புகள் மூலம், ராமாயணம் இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |