அரிய வகை எறும்பு கூடு திருட்டு - பிரித்தானியாவில் பொலிஸ் விசாரணை தீவிரம்
Rare Ant Colony Stolen From England Reserve: பிரித்தானியாவில் அரிய வகை எறும்புகள் கொண்ட கூடு திருடப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் திருடப்பட்ட எறும்பு கூடு
இங்கிலாந்தின் தெற்கு டெவான் (Devon) பகுதியில் உள்ள சட்லே நைட்டன் ஹீத் (Chudleigh Knighton Heath) இயற்கை சரணாலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அரிய எறும்புகள் அடங்கிய ஒரு கூடு மர்மமான முறையில் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக டெவான் மற்றும் கார்ன்வால் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட கூடு Narrow-Headed Ants எனப்படும் மிக அரிய வகை எறும்புகளை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய இழப்பு
இந்த ஒரு கூட்டில் மட்டும் 1,000 முதல் 5,000 வரை எறும்புகள் மற்றும் முட்டையிடும் ராணி எறும்புகள் இருந்திருக்கலாம். ராணி எறும்புகள் 25 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை என்பதால், இந்த திருட்டு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
டெவான் வனவிலங்கு அறக்கட்டளை (Devon Wildlife Trust) ஆராய்ச்சியாளர்கள் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, கூடு இருந்த இடத்தில் பெரிய குழி தோண்டப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். யாரோ ஒருவர் மண்வெட்டியைக் கொண்டு கூட்டை முழுமையாக அகற்றி சென்றிருப்பது உறுதியானது.
இந்த அரிய எறும்பு இனங்கள் கடந்த நூற்றாண்டில் வாழ்விடங்களை இழந்து, விவசாய மாற்றங்கள் மற்றும் கட்டுமான வளர்ச்சி காரணமாக கடுமையாக குறைந்துவிட்டன. தற்போது இங்கிலாந்தில் இந்த இன எறும்புகள் வாழும் கடைசி இடமாக இந்த இயற்கை காப்பகம் மட்டுமே கருதப்படுகிறது.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) வெளியிட்டுள்ள சிவப்பு பட்டியலில் இவை "அச்சுறுத்தலுக்கு நெருக்கமானவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திருட்டுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சிலர் எறும்புகளை வேறு பகுதிக்கு மாற்ற முயன்றிருக்கலாம் என்றும், அரிய பூச்சிகளை சேகரிக்கும் ஒருவரின் செயலாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனினும், சரியான திட்டமிடல் மற்றும் நிபுணத்துவம் இல்லாமல் ஒரு முழு எறும்பு காலனியை இடமாற்றம் செய்து வெற்றியடைவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக டெவான் வனவிலங்கு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் யாரேனும் தகவல் அறிந்திருந்தால் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |