அரிதிலும் அரிது... வட கொரியாவுக்கு தப்பி வந்த நபரால் பரபரப்பு
புத்தாண்டு நாளில் தென் கொரிய நபர் ஒருவர் தப்பி, பாதுகாப்பு மிகுந்த வடகொரிய எல்லைக்குள் தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தகவலை தென் கொரிய ராணுவமே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. தென் கொரியாவின் முதன்மை ராணுவ அதிகாரி இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு சுமார் 9.20 மணியளவில் கண்காணிப்பு கருவிகளுடன் ஒருவர் நாட்டு எல்லையின் கிழக்குப் பகுதியில் நுழைந்ததை அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபரை தென் கொரிய ராணுவம் துரத்திச் சென்றதாகவும், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாகவும், அந்த நபர் வடகொரிய எல்லைக்குள் நுழைந்துள்ளதை ராணுவம் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவை பொறுத்தமட்டில் இது சட்டவிரோதமான செயல் என்றே அந்த ராணுவ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நபரின் பாதுகாப்பு தொடர்பில் வடகொரியா உறுதி அளிக்க வேண்டும் என தென் கொரியா தகவல் அளித்துள்ளதாகவும்,
ஆனால் வடகொரியா தரப்பில் இருந்து மறுபடி ஏதும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் வேளையிலேயே தென் கொரிய நாட்டவர் எல்லை தாண்டிய சம்பவமானது நடந்துள்ளது.
மேலும், 2020 செப்டம்பர் மாதம் தென் கொரிய மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதால் வடகொரிய ராணுவம் அந்த அதிகாரியை சுட்டுக்கொன்றதாகவே கூறப்பட்டது.
குறித்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வடகொரிய நிர்வாகம் மன்னிப்பு கோரியிருந்தது. தற்போது தென் கொரிய நாட்டவர் ஒருவர், வடகொரியாவில் தஞ்சமடைந்துள்ளதால், அவரின் நிலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றே தெரியவந்துள்ளது.
1990 முதல் இதுவரை ஏழ்மை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக 34,000 வடகொரிய மக்கள் தென் கொரியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால் அரிதிலும் அரிதாகவே தென் கொரிய மக்கள் வடகொரியாவுக்கு தஞ்சமடையும் சம்பவம் நிகழும் என கூறப்படுகிறது.