ஐக்கிய அமீரகத்தை மிதக்கவைத்த பேய் மழை... டசின் கணக்கான விமானங்கள் ரத்து
ஐக்கிய அமீரகத்தின் முதன்மையான நகரங்கள் பல பேய் மழையால் மிதக்கும் நிலையில், அமீரக விமான நிலைய அதிகாரிகள் டசின் கணக்கான விமானங்களை ரத்து செய்தனர் அல்லது தாமதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கியது
துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை 13 விமானங்களை ரத்து செய்தது, மேலும் இரவு முழுவதும் பெய்த மழைக்குப் பிறகு அண்டை மாகாணமான ஷார்ஜாவின் விமான நிலையத்திலும் தாமதங்கள் மற்றும் ரத்துகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஷார்ஜா மாகாணத்தின் பிரதான வீதி முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதிவாசிகள் வெறுங்கால்களால் அந்த வெள்ளத்தில் நடந்து செல்வதைக் காண முடிந்தது.
2024 ஏப்ரல் மாதத்திலும் ஐக்கிய அமீரகத்தில் இதுபோன்ற கனமழை பெயதது. துபாயின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதற்கு இது வழிவகுத்தது.
இதனிடையே, வியாழக்கிழமையன்று, புயலுடன் கூடிய மழை நெருங்குவதால், முற்றிலும் அவசியமானாலன்றி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களை வலியுறுத்தியிருந்தது.

வளைகுடா நாடுகளிலும்
வெள்ளிக்கிழமை அதிகாலையில், துபாயில் அடைபட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள தேங்கிய நீரை அகற்றும் பணியில் நீர் இறைக்கும் லொறிகள் ஈடுபட்டிருந்தன.
முன்னதாக துபாய் மற்றும் தலைநகர் அபுதாபி உட்பட நாடு முழுவதும் வியாழன் முதல் வெள்ளி வரை மழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

கத்தார் உட்பட மற்ற வளைகுடா நாடுகளிலும் கனமழை பெய்தது. 76 ஆண்டுகளுக்கு முன்பு மழை தொடர்பான பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு பெய்த மிகக் கனமழையானது துபாய் மாகாணத்தை பல நாட்களுக்கு முடக்கியது. மழை காரணமாக குறைந்தது நான்கு பேர் மரணமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |