அறிமுக டெஸ்டில் சதமடித்த 22 வயது வீரர்: ஆப்கான் மிரட்டல் வெற்றி..புகழ்ந்து தள்ளிய ரஷித் கான்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இஸ்மத் ஆலம் முதல் சதம்
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் புலவாயோ நகரில் நடந்தது.
ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, ஜிம்பாப்பே 243 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா (Rahmat Shah) 139 ஓட்டங்கள் விளாசினார்.
அவரைத் தொடர்ந்து 22 வயது இளம் வீரர் இஸ்மத் ஆலம் (Ismat Alam) நிதானமாக ஆடி சதம் அடித்தார். இது அவருக்கு முதல் சர்வதேச சதம் ஆகும். 181 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 363 ஓட்டங்கள் குவித்தது. முஸரபாணி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரஷித் கான் பாராட்டு
அடுத்து 278 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 205 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரஷித் கான் 7 விக்கெட்டுகளும், ஜியா உர் ரெஹ்மான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் டெஸ்ட் டிரா ஆனதால் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
வெற்றி குறித்து பேசிய ரஷித் கான் (Rashid Khan), "இது ஒரு குழு வெற்றி. ரஹ்மத் ஷா மற்றும் ஆலம் ஆகியோர் ஆடிய ஆட்டம் எளிதானது அல்ல. அறிமுக இன்னிங்ஸில் ஆலம் 0 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் அவர் வெளியேறி இரண்டாவது இன்னிங்சில் நீண்ட நேரம் துடுப்பாட விரும்பினார்.
அதேபோல் சதம் அடித்தார். அவர் ஒரு முன்மாதிரியாக இருப்பது அணிக்கு ஊக்கமளிக்கிறது. அவர்கள் இருவரும் நாங்கள் எங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வழங்க வாய்ப்பளித்தனர். நான் எளிமையாக இருக்க விரும்புகிறேன்.
சூழ்நிலைக்கு பழகிவிட்டேன், மூன்று ஆண்டுகளாக டெஸ்டில் பந்து வீசவில்லை. ஆனால் நான் 10 - 11 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினேன்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |