இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன்; இப்போது நெஞ்சில் குத்தப்படுகிறேன் - மனம் திறந்த ரவி மோகன்
ரவி மோகன்
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய நடிகர் ரவி மோகன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
ரவி மோகன் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக செய்வதாக ரவி மோகன் அறிவித்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஆர்த்தி குற்றச்சாட்டு
சமீபத்தில் திருமண நிகழ்வு ஒன்றில், நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து, ரவி மோகன் தனது தந்தை பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாகவும், நீதிமன்றம் சொல்லும் வரை நான் அவரின் மனைவிதான், முன்னாள் மனைவி என குறிப்பிட வேண்டாம் என்று ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு , ராதிகா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், ஜெயம் ரவி தன் மீது வரும் விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் 4 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிழைப்பிற்கான போராட்டம்
இந்த அறிக்கையில், இரக்கமே இல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கை உண்மையே இல்லாமல் திரிக்கப்பட்டு வதந்திகளாக மாறுவதைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. எனது மௌனம் ஒரு பலவீனம் அல்ல, அது ஒரு பிழைப்பிற்கான போராட்டம்.
ஆனால் எனது பயணத்தையோ அல்லது எனது வடுக்களையோ அறியாதவர்களால் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, நான் பேச வேண்டும். என்னுடைய கடந்த திருமண உறவில் இருந்து யாரையும் என்னை வைத்து அனுதாபமும், புகழும் தேடிக்கொள்ள நான் அனுமதிக்க மட்டேன்.
நான் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இது விளையாட்டு அல்ல என் வாழ்க்கை. என் உண்மை. பல ஆண்டுகளாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறேன்.
பிள்ளைகளை பயன்படுத்துவது வேதனை
இத்தனை ஆண்டுகளாக என் பெற்றோரையே பார்க்க விடாமல் தனிமைப்படுத்தப்பட்டேன். அப்படி இருந்தும் கூட என் திருமண வாழ்க்கையை காப்பாற்றவே நினைத்தேன். இனியும் இப்படி வாழவே முடியாது என்றான பிறகே அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தேன். அந்த முடிவை எளிதில் எடுக்கவில்லை.
விவாகரத்து குறித்து என் குடும்பம், நெருங்கிய நண்பர்கள், ரசிகர்களிடம் ஏற்கனவே பேசிவிட்டேன். என் முன்னாள் மனைவி உள்பட அனைவரின் தனியுரிமையையும் பாதுகாக்க அப்படி செய்தேன். மேலும் எதையும் கணிக்க வேண்டாம் என்றும், யாரையும் குறை சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன்.
ஆனால் என்னுடைய மெளனம் குற்றவுணர்ச்சியாக கருதப்படுகிறது. அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தபோதே முன்னாள் மனைவி என்னும் வார்த்தையை தேர்வு செய்துவிட்டேன். அது என் கடைசி மூச்சு இருக்கு வரை இருக்கும்.
All these years I was being stabbed in the back, now I'm only glad that I'm being stabbed in the chest..
— Ravi Mohan (@iam_RaviMohan) May 15, 2025
First and Final One From My Desk !
With Love
Ravi Mohan
‘Live and Let Live’ pic.twitter.com/Z0VbFYSLjU
அண்மையில் நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வைத்து, ஒரு தந்தையாக என் மீது பொய் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளது. அது எல்லாமே பொய். பணத்திற்காகவும், அனுதாபத்திற்காகவும் என் பிள்ளைகளை பயன்படுத்துவதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.
நான் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்பதற்காக என் பிள்ளைகளுடன் பவுன்சர்களை அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு தந்தையாக என் பொறுப்பை விமர்சிக்கிறீர்கள். நாங்கள் பிரிந்த ஒரு மாதத்திற்கு பின் என் குழந்தைகள் கார் விபத்தில் சிக்கியது பற்றி ஒரு மூன்றாம் நபர் சொல்லிதான் நான் தெரிந்துகொண்டேன்.
என்னால் முடிந்த எல்லாவற்றை வைத்து என் முன்னாள் மனைவிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்று எனக்கு ஏற்பட்டிருக்கும் நிலை எந்த தந்தைக்கும் வரக்கூடாது. ஒரு நாள் என் குழந்தைகளுக்கு உண்மை புரிந்து ஒரு ஆணாக நான் இந்த முடிவை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தேன் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
பொன்முட்டையிடும் வாத்து
நான் சம்பாதித்தது, சொத்துக்கள், சோஷியல் மீடியா கணக்குகள், என் கெரியர் முடிவு, என் பிள்ளைகளுடனான உறவு, அடிப்படை உரிமை, என் பெற்றோருடனான உறவு என எல்லாமே பறிக்கப்பட்டு பெரும் கடனுக்கான சூரிட்டியில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன்.
இது எல்லாம் அவரும், அவரின் பெற்றோரும் சொகுசாக இருக்க. கடந்த 5 ஆண்டுகளாக என் அப்பா, அம்மாவுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவிடவில்லை.என்னை கணவனாக இல்லை பொன்முட்டையிடும் வாத்தாக தான் அவர் நடத்தினார்.
காதல் என்கிற பெயரில் என் பணம், சொத்து என எல்லாத்தையும் தனக்காக பயன்படுத்திக் கொண்டார். அவரின் லைஃப்ஸ்டைல் தான் இந்த நிதி பிரச்சனைக்கு எல்லாம் காரணம். கடந்த 16 ஆண்டுகளாக இப்படிப்பட்ட வாழ்க்கையை தான் வாழ்ந்தேன்.
கெனிஷா பிரான்சிஸ்
கெனிஷா பிரான்சிஸைப் பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்த ஒரு தோழி அவர்.எனது பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதும் கெனிஷா எனக்காக நின்றார்.
சூழ்நிலையை உணர்ந்து, தயங்காமல் வந்த ஒரு அழகான துணை அவர். நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக போராடும் அனைத்துப் போராட்டங்களையும் கெனிஷா நேரடியாக பார்த்தார். புகழுக்காகவோ, கவனத்திற்காகவோ அல்லாமல், இரக்கத்துடன் வலிமையுடன் என்னுடன் இருக்க தீர்மானித்தார்.
நான் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர் தான். உங்கள் வாழ்க்கையிலும் ஒரு ஒளியைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். அவரின் நடத்தையையும் தொழிலையும் அவமதிக்கும் ஒரு சிறிய கிண்டலை கூட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
அவர் ஒரு தெரபிஸ்ட். அதைவிட அவர் அற்புதமான பாடகி. ஆரம்பத்தில் என் கதையைச் சுருக்கமாகக் கேட்ட நிமிடத்தில், எனக்கு ஒரு தோழியாக மட்டும் உதவுவேன் என்றும், தெரபிஸ்ட்டாக உதவ மாட்டேன் என்றும் உறுதியளித்தார்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |