பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்பு
பிரித்தானிய உள்துறைச் செயலரின் புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளுக்கு, ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகிவருகிறது.
புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், புதிய புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளார்.

ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி பிரித்தானியாவில் வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் ஷபானா.
ஆனால், பிரித்தானியாவில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட ஏராளமானோர், விரைவில் தங்களுக்கு காலவரையறையின்றி வாழ அனுமதி கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், ஷபானா அறிமுகம் செய்த புதிய விதிகள் அந்த நிலையை மாற்றியுள்ளதால், கடும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
ஷபானாவின் இந்த கட்டுப்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. 10க்கும் மேற்பட்ட மத அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், இந்த கட்டுப்பாட்டைக் குறித்து கவலை தெரிவித்துள்ளதுடன், அது குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு ஷபானாவை வலியுறுத்தியுள்ளார்கள்.
இதற்கிடையில், ஷபானாவின் இந்த புதிய கட்டுப்பாட்டுக்கு ஆளும் லேபர் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகிவருகிறது.
பிரித்தானியாவின் முன்னாள் துணைப் பிரதமரான ஏஞ்சலா ரெய்னர், ஷபானாவின் இந்த திட்டம் பிரித்தானியாவின் கொள்கைகளுக்கு உகந்தது அல்ல, பிரித்தானியாவில் இப்படி நடக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

நம் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பைச் செய்த புலம்பெயர்ந்தோரை புதிய கட்டுப்பாடுகள் பாதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார் ஏஞ்சலா.
ஏற்கனவே போதுமான காலம் பிரித்தானியாவில் வாழ்ந்து, பெரிய அளவில் முதலீடும் செய்தவர்கள், இப்போது தங்கள் எதிர்காலம் குறித்து அஞ்சும் நிலை உருவாகியுள்ளது, ஒருவித நிலையில்லாத்தன்மை உருவாகியுள்ளதால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைத்துப்போயிருக்கிறார்கள் என்கிறார் ஏஞ்சலா.
ஆக, நம் நாடு, நிலைத்தன்மை கொண்டவையான பொருளாதார புலம்பெயர்தல் விதிகள் கொண்ட நாடாக இருக்கட்டும்.
அதே நேரத்தில், இங்கு வாழும் அனைவரும் மதிக்கவேண்டும் என நாம் விரும்பக்கூடிய பிரித்தானிய கொள்கைகளுக்கு உகந்த விதிகளை உடைய நாடாகவும் நம் நாடு இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ஏஞ்சலா.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |