டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 இழப்பீடு - ரிசர்வ் வங்கி திட்டம்
டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்பவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டல் மோசடி
இந்தியாவில், UPI, நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நொடிப்பொழுதில் உலகில் எந்த மூலையில் உள்ளவருக்கு பணம் அனுப்ப முடிகிறது. அதேவேளையில், இதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்தியர்கள் ரூ.52,976 கோடியை டிஜிட்டல் மோசடிகளில் இழந்துள்ளனர். இதில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.19,812.96 கோடிகளை இழந்துள்ளனர். நிதி மோசடி தொடர்பாக 21,77,524 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், 77% முதலீட்டுத் திட்டங்களின் பெயராலும், 8% டிஜிட்டல் கைது மோசடி மூலமாகவும், 7% கிரெடிட் கார்டு மோசடி மூலமாகவும், 4% பாலியல் மோசடி மூலமாகவும் , 3% மின் வணிக மோசடி மூலமாகவும், 1% செயலி/ தீங்கிழைக்கும் மென்பொருள் அடிப்படையிலான மோசடி மூலமாகவும் பணத்தை இழந்துள்ளனர்.
இதில் தமிழ்நாடு 2025 ஆம் ஆண்டில், ரூ. 1,897 கோடி இழப்பு ஏற்பட்டு, 12,32,90 புகார்கள் பதிவு செய்யப்பட்டு 3வது இடத்தில் உள்ளது.
ரூ.25,000 இழப்பீடு
இவ்வாறாக, டிஜிட்டல் முறையில் இழந்த பணத்தை மீட்டெடுப்பதும், மோசடியாளரை கண்டறிவதும் பாரிய சவாலாக உள்ளது.
இந்த நிலையில், டிஜிட்டல் மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஒருவர் இணைய மோசடி மூலம் பணத்தை இழந்திருந்தால், இழந்த தொகையில் இருந்து 85% வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும், இந்த தொகை அதிகபட்சமாக ரூ.25,000 வரை மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இழப்பீடு தொகை, ஒரு நபருக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொகையை, வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு (DEA) நிதியில் இருந்து வழங்கப்படும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜே சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து விரைவில் வரைவு வெளியாகி பொதுமக்களின் கருத்து கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |