ஜூன் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி... இக்கட்டான கட்டத்தில் ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடத்தவிருக்கும் நாணய கொள்கை கூட்டமானது, மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் நெருக்கடி
அண்மை நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

சமீபத்திய இந்த விலை உயர்வு, வெறும் எரிபொருள் விலை உயர்வு மட்டுமல்ல, இது நாடு முழுவதும் உள்ள பொருட்களின் விலையை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் சரக்கு போக்குவரத்தில் 65 முதல் 70 சதவீதம் சாலை வழியாகவே முன்னெடுக்கப்படுகிறது. டீசல் விலை உயர்ந்தால் லொறி, பேருந்து உரிமையாளர்கள் சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் காய்கறி, பால், உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தானாகவே உயரும். பெட்ரோல் நேரடியாக குடும்பச் செலவை பாதித்தாலும், டீசல் மூலம் வரும் மறைமுக பாதிப்பு மிகப் பெரியது.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 100 டொலருக்கு மேல் தொடர்ந்து நிலைத்திருப்பதும் இந்தியாவின் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்தியா தனது எரிசக்தித் தேவையில் சுமார் 85 சதவீதத்துக்கு மேல் இறக்குமதியை நம்பியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு இரண்டும் சேர்த்து இந்தியாவின் நிதிநிலையை ஆட்டம் காட்டி வருகிறது.
இதனால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியப் பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்படும். இறக்குமதிச் செலவை அதிகரிக்கும், நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும், மேலும் ரூபாயின் மதிப்பை பலவீனப்படுத்தும்.
வட்டி விகிதம்
இந்த நிலையில், ஜூன் மாத முதல் வாரத்தில் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழுவின் கூட்டம் (MPC) மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுக்கிறது.
பணவீக்கம் கட்டுக்குள் இருந்தால் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது எரிபொருள் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் மீண்டும் உயரும் அபாயம் உள்ளது.

எனவே வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை ஆர்பிஐ தள்ளிப் போட வாய்ப்பு அதிகம். இல்லையெனில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தலாம்.
இந்த உயர்வு அரசு பத்திரங்களுக்கும் பொருந்தும் என்பதால் அன்னிய முதலீடுகளை ஈர்க்க இது முக்கிய வழியாக மாறக்கூடும். இதேவேளையில் வட்டியை உயர்த்தினால் கடன் வாங்கிய இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இது பெரும் சுமையாக மாறும் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |