கோஹ்லி, படிக்கல் சிக்ஸர்மழை! 15.4 ஓவர்களில் 203 ரன் சேஸ் செய்து சாதனை வெற்றி
ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது.
இஷான் கிஷான் சிக்ஸர்மழை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தெரிவு செய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர்களான ட்ராவிஸ் ஹெட் (11), அபிஷேக் ஷர்மா (7) சொதப்ப, அடுத்து வந்த நிதிஷ் குமாரும் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ஆனால், அணித்தலைவர் இஷான் கிஷான் சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவருடன் கூட்டணி அமைத்த ஹெய்ன்ரிச் கிளாஸனும் அதிரடியில் மிரட்டினார். அவர் 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அரைசதம் அடித்த கிஷான் 38 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
படிக்கல், கோஹ்லி அபார அரைசதம்
ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அனிகேத் வெர்மா 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாச ஐதராபாத் அணி 201 ஓட்டங்கள் குவித்தது.

ஜேக்கப் டுஃபி, ரோமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், அபிநந்தன் மற்றும் சுயாஷ் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியில் பிலிப் சால்ட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார்.

விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 69 ஓட்டங்கள் விளாச (5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் 203 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |