மீண்டும் கடைசி கட்டத்தில் மாறிய ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்திய கோஹ்லி படை
சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி துடுப்பாட்டத்தில் களமிறங்கியது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இதில் தேவ்தத் படிக்கல் 3வது ஓவரில் 11 ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
விராட் கோஹ்லி 4 பவுண்டரிகளை விரட்டி 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது(14), டி வில்லியர்ஸ்(1), வாஷிங்டன் சுந்தர்(8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதத்தை கடந்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல்(59) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் சஹா 9 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் வார்னரும் மனீஷ் பாண்டேவும் இணைந்து ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் ஜோடி சேர்ந்து 83 ஓட்டங்களை குவித்தனர்.
இந்நிலையில் அரைசதம் கடந்த வார்னர், 54 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேகம் குறைந்தது. 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் 115 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆட்டத்தின் கடைசி 4 ஓவரில் அணி வெற்றி பெற 35 ஓட்டங்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் 17வது ஓவரை வீசிய ஸ்பின்னர் ஷபாஸ் அகமது, அந்த ஓவரில் பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே மற்றும் அப்துல் சமாத் ஆகிய மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார்.
தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 143 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.